தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டித்து சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் அமைப்பினர்.
தனியார் பள்ளிகளுக்கு கல்விக்கட்டணம் நிர்ணயிக்கக் கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர்.
தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு உடனடியாக கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்வது, 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை மத்திய – மாநில அரசுகள் பள்ளி நிர்வாகங்களுக்கு உடனடியாக ஒதுக்கீடு செய்வது, அரசு பள்ளிகள் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று காலை நடைபெற்றது.
அந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் பி.உச்சிமாகாளி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் டிபிஐ பிரதான நுழைவுவாயிலை முற்றுகையிட்டனர். ஆனால், அவர்களை டிபிஐ உள்ளே செல்ல போலீஸார் அனுமதிக்கவில்லை. போராட்டத்தை முன்னிட்டு டிபிஐ வளாகத்தின் அனைத்து நுழைவுவாயில்களும் பூட்டப்பட்டு, போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டத்தின்போது உச்சிமாகாளி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை ஒழுங்குபடுத்த நீதிபதி டி.வி. மாசிலாமணி கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி ஒருசில பள்ளிகளுக்கு மட்டுமே கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது. கல்விக் கட்டணத்தை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் நிர்ணயிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை பல தனியார் பள்ளி களுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை.
அதிக கட்டணம் வசூல்
இந்த விஷயத்தில் தனியார் பள்ளிகளுக்கு அரசு ஆதரவாக இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. கட்டணம் நிர்ணயிக்கப்படாததால் தனியார் பள்ளிகள் மாணவர்களிடமும் பெற்றோர் களிடமும் அதிக கட்டணம் வசூலித்து வருகின்றன.
எனவே, ஜூன் 15-ம் தேதிக்குள், கட்டணம் நிர்ணயிக்கப்படாத தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். மாணவர் சேர்க்கை குறைவை காரணம் காட்டி அரசு பள்ளிகளை மூடும் திட்டத்தை அரசு கைவிட வேண் டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தடையை மீறி டிபிஐ வளாகத்துக்குள் செல்ல முயன்றதால் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.