தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்களை பெற இன்று கடைசி நாளாகும்.
சென்னை,

தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்கு திங்கள்கிழமை (ஜூன் 18) கடைசி நாளாகும்
எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தமிழகத்தில் ஜூன் 11-ஆம் தேதி தொடங்கியது. 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் விண்ணப்ப விநியோகம் நடைபெற்று வருகிறது. இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் நடைமுறையும் உள்ளது.
அரசு இடங்களுக்கு 67, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 35 என மொத்தம் 102 விண்ணப்பங்கள் ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கப்பட்டன. விண்ணப்பங்களை நேரில் பெறவும், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யவும் திங்கள்கிழமை (ஜூன் 18) கடைசியாகும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மருத்துவக் கல்வி இயக்ககத்தில் சமர்ப்பிக்க செவ்வாய்க்கிழமை (ஜூன் 19) கடைசி நாளாகும். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஜூன் 28-இல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஜூலை 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரச் சேவைகள் நடத்தும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு செய்வதற்கும் திங்கள்கிழமை (ஜூன் 18) கடைசி;நாளாகும்.