தமிழகத்தில் வளர்ச்சி திட்டம் எதுவும் வரக்கூடாது என்பதில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குறியாக இருக்கிறார் என, பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த தமிழிசை சவுந்தரராஜன், “தமிழகத்திற்கு மத்திய அரசு நல்ல உதவிகளையும், திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது. மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் எதிர்த்தவர்கள் இன்று தலைகுனிய வேண்டும்.
கமல்ஹாசன் உட்பட அனைவரும் எதிர்க்கட்சிகள் இணைந்து வெற்றிபெற முடியும் என்ற மாயத்தோற்றத்தை உண்டாக்குகின்றனர். எத்தனை எதிர்க்கட்சிகள் இணைந்தாலும் இன்றைக்கு பாஜகவின் பலத்தை அவர்களால் எதிர்கொள்ள முடியாது. கட்சி ஆரம்பித்து ஆவணங்களை சமர்ப்பித்தால் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்துவிடும்.
ஆனால், மக்கள் மனதில் அங்கீகாரம் கிடைக்க வேண்டும். கமல் கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு நன்றி சொல்கிறார். தமிழகத்திற்கு தண்ணீர் கொடுத்தது குமாரசாமி அல்ல, கடவுள் ரங்கசாமி. அரசியலில் ஆழ்ந்த புரிந்துணர்வு இல்லாமல் பாஜகவுக்கு எதிராக கருத்து சொல்கின்றனர்.
பாஜக பல வளர்ச்சி திட்டங்களை கொடுத்து வருகிறது. திமுக-காங்கிரஸ் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்திற்கு கொண்டு வந்த ஒரு நல்ல திட்டம் என்ன? அவர்களால் சொல்ல முடியாது. ஆனால் அவர்கள் அரசியல் செய்கின்றனர். நாமக்கல்லில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக திமுகவினர் கருப்புக்கொடி காட்டுகின்றனர். எதிர்மறை அரசியலை கைவிட வேண்டும்.
சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக திமுகவினர் போராடுகின்றனர். தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு ஸ்டாலின் எதிராக இருக்கிறார். தமிழகத்தில் வளர்ச்சி திட்டம் வரக்கூடாது என குறியாக இருக்கிறார்.
நல்ல திட்டம் வரும்போது மனம் திறந்து பாராட்டுங்கள். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கவில்லை என போராடினர். ஆனால், குமாரசாமி தமிழகத்திற்கு எதிராக நடந்துகொண்டால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்.
மத்திய அரசு குறித்த காலத்தில் ஆணையத்தை அமைத்து அரசிதழில் வெளியிட்டு இருக்கிறது. அதுவும் கர்நாடக உறுப்பினர்கள் இல்லாமல் ஆணையத்தை அறிவித்திருக்கின்றனர். இப்போது பிரதமருக்கு எதிராக திமுகவினர் காட்டிய கருப்பு கொடிகளை, கருப்பு பலூன்களை திரும்பபெற வேண்டும். பெங்களூரு நோக்கி நடைபயணம் மேற்கொள்ள வேண்டும்.
குட்கா விவகாரம் உண்மையிலேயே விசாரிக்க வேண்டியது. மளிகைக்கடையில் இருந்து கூட குட்கா பறிமுதல் செய்யப்படுகிறது. கோவையில் சட்ட விரோதமாக குட்கா ஆலை இயங்க திமுக லைசென்ஸ், தண்ணீர் வசதி ஆகியவற்றை பெற்றுக் கொடுத்துள்ளது” என தமிழிசை தெரிவித்தார்.