ஆளுநர் ஆய்வு நடத்தி அரசை ஊக்கப்படுத்துகிறார் என்று அமைச்சர் பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
கவிஞர் கண்ணதாசனின் 92-வது பிறந்தநாளையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, பாண்டியராஜன் உள்ளிட்டோர் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது:
கடமைகளை செய்கிறார்
ஆளுநர் ஆய்வு செய்வதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. தமிழக அரசு பற்றி எந்த குறையும் கூறாமல் ஆய்வுகள் நடத்தி அரசை ஊக்கப்படுத்துகிறார். அரசியல் சாசன சட்டத்தின்படி ஆளுநர் அவரது கடமைகளை செயல்படுத்துகிறார். ஆளுநர் ராஜ்பவனில் மட்டும் இருக்க வேண்டும் என்ற நிலை கிடையாது. அவருக்கு எதிராக திமுக கறுப்பு கொடி காட்டுவது சட்டரீதியாக சரியல்ல. அவர்கள் ஆளுநருக்கு எதிராக போராடுவது சட்டப்படியோ, தார்மீக ரீதியிலோ சரியானது அல்ல.
தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களை விடவும் தமிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளன. நக்சலைட்கள் பற்றி உண்மைக்கு புறம்பான கருத்துகளை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறி வருகிறார்.
பலன்கள் அதிகம்
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியிலேயே தமிழகத்தில் நக்சலைட்கள், மாவோயிஸ்ட்களின் ஊடுருவல் தடுக்கப்பட்டு உள்ளது. பசுமை வழி சாலை அமைப்பதால் பாதிப்பினை விட பலன்கள் அதிகம் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.