தாய் கட்சியான காங்கிரஸில் மீண்டும் இணைந்த கிரண்குமார் ரெட்டி ராகுல்காந்தியுடன் சந்திப்பு

ஐதராபாத்
ஆந்திர மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வரும், ‘ ஜெய் சமைக்ய ஆந்திரா’ கட்சியின் தலைவருமான கிரண்குமார் ரெட்டி, இன்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து மீண்டும் தாய்க்கட்சியான காங்கிரஸில் இணைந்தார்.
கிரண்குமார் ரெட்டி ஏற்கனவே கடந்த ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசிய நிலையில், இன்று முறைப்படி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து, மீண்டும் தன்னை காங்கிரஸ் கட்சியில் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.
ஆந்திர காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுவேந்திர ரெட்டியும், முன்னாள் கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டி போன்ற  மூத்த தலைவர்களின் முன்னிலையில் அவர் மீண்டும் கட்சியில் சேர்ந்தார்.
இது குறித்து கேரள முன்னாள் முதல்வர் உம்மன் கூறியதாவது:-
காங்கிரஸ் நிலைப்பாடு தெளிவானது மற்றும் அனைவருக்கும் நன்கு தெரியும். கட்சியை விட்டு வெளியேறியவர்கள் கட்சிக்கு மீண்டும் வருவார்கள். இது காங்கிரசுக்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் மிக முக்கியமான ஒரு நேரமாகும். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளையும் ஐக்கியப்படுத்த முயற்சிக்கிறார். கட்சியை விட்டு வெளியேறிய அனைத்து தலைவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் நாங்கள் வரவேண்டும் என அழைப்புவிடுக்கிறோம்.
ஆந்திர மாநிலம் பிரிக்கப்படாமல் இருந்தபோது, அப்போதைய காங்கிரஸ் முதல்வர் ராஜசேகர் ரெட்டி 2009ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்ததை தொடர்ந்து, தற்காலிக முதல்வராக ரோசைய்யா பதவி ஏற்றார். பின்னர் 2010ம் ஆண்டு ரோசையா மாற்றப் பட்டு, கிரண்குமார் ரெட்டி முதல்வராக 2014ம் ஆண்டு வரை பணியாற்றி வந்தார்.
அதையடுத்து, ஆந்திரா இரண்டாக பிரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிரண்குமார் ரெட்டி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, தனிக்கட்சியை தொடங்கினார். அதுபோல, ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் ரெட்டியும் தனிக்கட்சி தொடங்கினார்.
இந்த நிலையில் கடந்த 2014ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், கிரண்குமார் ரெட்டி, தான் தொடங்கிய ‘ஜெய் சமைக்ய ஆந்திரா’ கட்சி சார்பில் போட்டியிட்டு மண்ணை கவ்விய நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
இதற்கிடையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றதும், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பலம் மிகுந்த கட்சியாக தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கில், முன்னாள் காங்கிரஸ் நிர்வாகிகள், கட்சியில் இருந்த பிரிந்து சென்றவர்கள் போன்ற பலருக்கு அழைப்பு விடுத்து, அவர்களை மீண்டும் தாய்க்கட்சியான காங்கிரஸ் கட்சியில் இணைத்து, கட்சியை மேலும் பலம்கொண்ட கட்சியாக மாற்றி வருகிறார்.
இதன் தொடர் நடவடிக்கை காரணமாக, ஆந்திராவில், காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற காங்கிரஸ் தலைவர்களை மீண்டும் கட்சிக்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக, கடந்த ஆண்டு கிரண்குமார் ரெட்டி ராகுல்காந்தியை சந்தித்து இணைந்து உள்ளார்.
இதேபோல காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று ஒ.எஸ்.ஆர். காங்கிரசையும், காங்கிரசில் இணைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published.