` திறனறி தேர்வில் அப்படியென்ன இருக்கிறது?!’ – டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை

திறனறி தேர்வு

முதன்மைத் தேர்வுகளில் நமது அணுகுமுறையையும் புத்திக் கூர்மையையும் சோதிக்கும் திறனறி (Aptitude) தாள், 2011-ம் ஆண்டு முதல் யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுகளில் இடம் பெற்றுவருகிறது. 2010-ம் ஆண்டு முதன்மைத் தேர்வுகள் வரையிலும் இந்தத் திறனரி சார்ந்த கேள்விகள் அனைத்தும் பொதுப் பாடங்களோடு சேர்த்தே கேட்கப்பட்டு வந்தன. தகுதித் தாளான இந்தத் திறனறி (Aptitude) தாளில் 200 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும் கேள்விகளுக்கு 66 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தால் போதுமானது. இந்தத் தாளில் நாம் பெறும் மதிப்பெண்கள் நமது இறுதி ரேங்கிங் (Ranking) அல்லது மெயின் தேர்வுக்கும் தேவையான கட் ஆஃப் என எதையும் நிர்ணயம் செய்வதில்லை. அதேசமயம் 66 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க முடியவில்லை என்றால் மெயின் தேர்வுக்கு நாம் தகுதியே பெறப்போவதில்லை. ஆக, யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுகளைப் பொறுத்தவரை, நமக்குத் தேவை பொதுப் பாடங்களில் கட் ஆஃபைவிட அதிக மதிப்பெண்கள் மற்றும் திறனறி தாளில் 66க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள். இவை இரண்டும் இருந்தால் நாம் அடுத்த நிலையான மெயின் தேர்வுக்குத் தகுதி பெறலாம். டி.என்.பி.எஸ்.சியைப் பொறுத்தவரை திறனறி (aptitude) என்று தனியாக தாள் எதுவும் இல்லை. பொதுப் பாடங்களுக்கான தாளிலேயே திறனறி சார்ந்த கேள்விகள் இடம்பெறுகின்றன.

‘ திறனறி தேர்வில் அப்படியென்ன இருக்கிறது; என்ன மாதிரியான கேள்விகள் எல்லாம் கேட்கப்படும்?’ என்ற கேள்விகள் இயல்பாக எழும். அது தொடர்பான தலைப்புகளை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். முதலில் நாம் பார்க்க இருக்கும் தலைப்பு, புரிதல் (Comprehension ). அதாவது கொடுக்கப்பட்ட பத்தி அல்லது வரிகள் அல்லது தகவல் ஆகியவற்றின் மீதான நமது புரிதலை சோதிக்கும் வகையிலான கேள்விகள் இந்தப் பகுதியில் இடம்பெறும். அந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்க நமக்கு முதலில் வரிகளில் உள்ள வார்த்தைகளின் அர்த்தம் தெரிந்திருக்க வேண்டும். பத்தியிலோ அல்லது வரியின் அடிப்படையில் அந்த வார்த்தை எதைக் குறிக்கிறது என்பது தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அந்த பத்தி சார்ந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு நம்மால் விடை அளிக்க முடியும். இதைத்தான் `புரிதல்’ என்கிறோம். ஆக, இந்தப் புரிதல் சார்ந்த கேள்விகளை எளிதில் சமாளிக்க, புதிய ஆங்கில வார்த்தைகளை தினமும் தெரிந்துகொள்வது மிக அவசியம். வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்தால்தான் அதில் உள்ள நியாய வாதத்தையும் (logic) அறிந்துகொள்ள முடியும். ஒரு நல்ல அகராதி (dictionary)யினை வைத்துக்கொண்டு தினமும் படிக்கும் செய்தித்தாளில் இருந்தே 5 புதிய வார்த்தைகளை தினமும் கற்றுக்கொள்ளுங்கள். தேர்வு எழுதும் முன் சுமார் 2,000 புதிய வார்த்தைகளைக் கற்றுக்கொண்டு இன்னும் தெம்பாக தேர்வை எதிர்கொள்ளலாம்.

அடுத்த முக்கிய தலைப்பு, மென் திறன்கள். அதாவது, பிறருடன் பழகுவது, செயல்படுவது, தொடர்பில் இருக்கும் திறமை ஆகியவை (Interpersonal skills and communication). இதில் நம்மிடம் உள்ள கவனிக்கும் திறன், முடிவெடுக்கும் தன்மை, பிரச்னைகளை தீர்க்கும் திறன், தன்முனைப்பு (Assertiveness ) மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் பாங்கு ஆகியவை முழுமையாக பரிசோதிக்கப்படுகின்றன. பாடத்திட்டத்தில் communication என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் தொலைதொடர்பு சார்ந்த கேள்விகளையும் எதிர்பார்க்கலாம்.

Leave a comment

Your email address will not be published.