தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் உலக நாடுகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என ஐநா பொது சபையில் இந்தியா தெரிவித்துள்ளது.
193 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள ஐநா பொது சபையில், ஐநா சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு வியூகம் (ஜிசிடிஎஸ்) என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீவிரவாத தடுப்பு வியூகத்தை மறு ஆய்வு செய்யும் வகையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்கவும் சர்வதேச சட்டத்தை மீறும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உலக நாடுகள் கூட்டு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐநாவுக்கான இந்திய துணை (நிரந்தர) தூதர் தன்மய லால் கூறியதாவது:
தீவிரவாத நடவடிக்கைகளை எதிர்த்து போரிடுவது தொடர்பாக ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தீர்மானத்தில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் புதிய தீர்மானத்திலும் இடம்பெற்றுள்ளன. இதில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. தீவிரவாத அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக தீவிரவாத அமைப்புகள் உலகின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அத்துடன் தங்களுடைய எல்லையை விரிவுபடுத்தி வருகின்றன.
புதிதாக ஆட்களைச் சேர்த்து வருகின்றன. தங்கள் செயல்பாட்டுக்கு தேவையான நிதியை திரட்டுவதுடன் அதைக் கொண்டு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றன. பெரும்பாலான நாடுகள் தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடும் விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான கூட்டு நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறி வருகிறோம். குறிப்பாக நம்மிடையே ஒருங்கிணைப்பு இல்லை. அரசியல் சுயலாபம் தான் இதற்குக் காரணம். இது ஏமாற்றம் அளிக்கிறது. இந்நிலை நீடிப்பது உலக நாடுகளின் பாதுகாப்புக்கு நல்லதல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.