போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கவும், தீவிரவாதத்தை வேரறுக்கவும் பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் கூடுதல் கண்காணிப்பு தேவை என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று வலியுறுத்தினார்.
போதைப் பொருள் பயன்படுத்துதல் மற்றும் சட்டவிரோத போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் நேற்று டெல்லியில் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மதுப் பழக்கத்தைத் தடுத்தல், போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் சிறந்த சேவை செய்தவர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:
நாட்டின் எல்லையோரப் பகுதிகளில் போதைப் பொருள் கடத்தல் அதிகரித்து வருவதாகத் தெரியவந்துள்ளது. போதைப் பொருள் கடத்தலுக்கும், தீவிரவாதத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதனால் நாட்டில் அரசியல் அமைதியின்மை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பஞ்சாப், மணிப்பூர் போன்ற எல்லையோர மாநிலங்களில் கூடுதல் கண்காணிப்புத் தேவை.
நாட்டின் எல்லையையொட்டிய மியான்மர்-லாவோஸ்-தாய்லாந்து நாட்டின் பகுதிகள், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-ஈரான் நாட்டுப் பகுதிகள் போதைப் பொருள் பழக்கத்துக்கும், சட்டவிரோத கடத்தலுக்கும் உறுதுணையாக உள்ளது.
போதைப் பொருள், குடிப்பழக்கத்துக்கு அடிமையாவதால் தனிநபர் ஒருவரின் குடும்பம், சமூகம் என அனைத்தும் பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அது சுகாதாரம், கலாச்சாரம், வளர்ச்சி, அரசியல் போன்ற பல களங்களில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் பேசும்போது, “போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்க உதவிட அரசு 1800110031 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையைத் தொடங்கியுள்ளது. போதைப் பொருளால் அடிமையானவர்களுக்கும், அவர்களது குடும்பத்துக்கும் இது உதவும். இது 24 மணி நேரமும் செயல்படும். மேலும் போதைப் பொருளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பத்திரிகைகள், எலக்ட்ரானிக், சமூக ஊடகங்களை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது” என்றார்.