உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.
ரஷ்யாவின் கஸான் மைதானத்தில் நேற்று எஃப் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணி, தென் கொரியாவை எதிர்த்து விளையாடியது. ஜெர்மனி 4-2-3-1 என்ற பார்மட்டிலும், தென் கொரியா 4-4-2 என்ற பார்மட்டிலும் களமிறங்கின. 6-வது நிமிடத்தில் ஜெர்மனியின் மார்கோ ரியூஸ், பாக்ஸின் இடதுபுறத்தில் இருந்து அடித்த பந்து கோல்கம்பத்துக்கு வலது புறம் விலகிச் சென்றது. 14-வது நிமிடத்தில் டோனி குரூஸின் கிராஸை பெற்ற ஜெர்மனியின் ஷமி ஹெதிரா தலையால் முட்டி கோல் அடிக்க முயற்சித்தார். ஆனால் பந்து கோல்கம்பத்துக்கு வலது புறம் தடுக்கப்பட்டது. 16-வது நிமிடத்தில் நிக்லஸ் தலையால் முட்டிய பந்தும் தடுக்கப்பட்டது. 19-வது நிமிடத்தில் தென் கொரியாவின் ஜங் வூ யங் அடித்த பந்து ஜெர்மனி கோல்கீப்பர் மனுவெல் நூயரால் தடுக்கப்பட்டது.
33-வது நிமிடத்தில் ஜெர்மனியின் மார்கோ ரியூஸ் அடித்த பந்தும் 39-வது நிமிடத்தில் வெர்னர் அடித்த பந்தும் இடைமறிக்கப்பட்டது. 39-வது நிமிடத்தில் லியோன் கோரட்ஸ்கா, பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து தலையால் முட்டிய பந்து இடது புறம் விலகிச் சென்றது. அடுத்த நொடியில் மேட்ஸ் ஹம்மெல்ஸ், 6 அடி தூரத்தில் இருந்து அடித்த பந்து தென் கொரியா கோல்கீப்பரால் தடுக்கப்பட்டது. முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.
2-வது பாதியில் ஜெர்மனி கூடுதல் வேகம் காட்டியது. 48-வது நிமிடத்தில் லியோன் கோரட்ஸ்காவின் கோல் அடிக்கும் முயற்சி கோல்கீப்பரால் தடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டோனி குரூஸ், வெர்னர், ஜோஸ்வா கிமிச், ஹெதிரா ஆகியோர் அடித்த பந்துகள் இடைமறிக்கப்பட்டது. 68-வது நிமிடத்தில் மரியோ கோம்ஸ், தலையால் முட்டிய பந்தை தென் கொரியா கோல்கீப்பர் மடக்கினார். 90 நிமிடங்கள் வரை இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படாத நிலையில் காயங்களுக்கு இழப்பீடாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதன் 3-வது நிமிடத்தில் தென் கொரியா வீரர் கிம் கோல் அடித்தார். ஆனால் இது முதலில் ஆப் சைடு என அறிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் விஏஆர் தொழில்நுட்ப உதவி நாடப்பட்டது. இதில் கிம் அடித்த கோல் ஆப் சைடு இல்லை என அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியில் உறைந்த ஜெர்மனி அணிக்கு அடுத்த 3-வது நிமிடத்தில் தென் கொரியா அடித்த 2-வது கோல் பேரிடியாக அமைந்தது. இந்த கோலை ஹெங்குமின் அடித்திருந்தார். முடிவில் தென் கொரியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கெனவே இரு ஆட்டங்களில் தோல்வியடைந்திருந்த தென் கொரியா அணிக்கு இந்த வெற்றி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற உதவவில்லை. ஆனால் அதேவேளையில் இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்ததன் மூலம் ஜெர்மனி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.
உலகக் கோப்பை வரலாற்றில் நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கிய பிரான்ஸ் 2002-ம் ஆண்டிலும், இத்தாலி 2010-ம் ஆண்டிலும், ஸ்பெயின் 2014-ம் ஆண்டிலும் லீக் சுற்றுடன் வெளியேறியிருந்தது. இந்த வரிசையில் தற்போது ஜெர்மனியும் இணைந்துள்ளது.
சுவீடன் அசத்தல்
எஃப் பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் சுவீடன் அணி 3-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தியது. அந்த அணித் தரப்பில் அகுஸ்டின்சன் 50-வது நிமிடத்திலும், கிரான்குவிஸ்ட் 62-வது நிமிடத்திலும் கோல் (பெனால்டி கிக்) அடித்திருந்தனர். 74-வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் ஆல்வரெஸ் ஓன் கோல் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் 6 புள்ளிகளுடன் சுவீடன் அணி தனது பிரிவில் முதலிடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்குள் கால் பதித்தது. அதேவேளையில் ஏற்கெனவே 6 புள்ளிகளை பெற்றிருந்த மெக்சிகோவும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.