நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் மழைக்கால கூட்டத்தொடரில் கடந்த 20-ம் தேதி மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்புக்கு முன்னர் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் விவாதத்தில் ஈடுபட்டனர். இந்த விவாதம் சுமார் 12 மணி நேரம் வரை நீடித்தது. அப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, யாரும் எதிர்பாராத விதமாகப் பிரதமர் மோடியைக் கட்டியணைத்தார். இது இன்றளவும் பெரும் சர்ச்சையாகப் பேசப்பட்டு வருகிறது. பிறகு ராகுலின் குற்றச்சாட்டுக்கு மோடி பதிலளித்தார். மோடி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்தாலும் அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில், ஜூலை 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து மட்டும் சுமார் 1.1 மில்லியன் ட்வீட்கள் பதிவாகியுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹாஸ்டாக்குகளில் ‘#noconfidencemotion’ என்ற ஹாஸ்டாக்கில் மட்டும் இவ்வளவு ட்வீட்டுகள் பதிவாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், கடந்த வெள்ளியன்று நிறைவு பெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஞாயிற்றுக்கிழமை வரை பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியாவின் ட்விட்டர் செயல் திட்டத் தலைவர் மஹிமா கவுல், “நாட்டில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் உடனடியாக அறிந்துகொள்வதற்கு ட்விட்டர் மிக முக்கியப் பங்காற்றி வருகிறது. அரசு தொடர்பான செய்திகளில் தொடங்கி அனைத்துத் தகவல்களும் இங்கு பரிமாறப்படுகின்றன. நாடாளுமன்ற நம்பிக்கையில்லா தீர்மானம் மிக முக்கியமானது என்பதால் பல மொழிகளில் பல மக்களும் இது குறித்து கருத்து பதிவிட்டுள்ளனர்” எனக் கூறியுள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் இல்லாமல் #MonsoonSession, #NoConfidenceVote, #NoConfidenceMotion, #NoConfidencePolitics, #IndiaTrustsModi ஆகிய ஹாஸ்டாக்குகள் அன்றைய தினம் ட்ரெண்டாகியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.