நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டம்; அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தருமாறு பிரதமர் மோடி வேண்டுகோள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற்றது. பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி, ஆந்திரா வுக்கு சிறப்பு அந்தஸ்து, காவிரி பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவ காரங்களால் இந்த கூட்டத்தொடர் முழுமையாக முடங்கியது.

இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி டெல்லியில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகித்தார். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ராஷ்டிரீய ஜனதா தளம், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஐக்கிய ஜனதா தளம் உட்பட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, ‘‘அனைத்து உறுப்பினர்களும் தங்கள் பிரச் சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பலாம். எனினும் நாடாளு மன்றத்தின் இரு அவைகளும் சுமுகமாக நடைபெற எதிர்க்கட்சி கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

கூட்டத்துக்குப் பிறகு நாடாளு மன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த குமார் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘ஆக்கப்பூர்வ மான விவாதங்களுக்கு மத்திய அரசு தயாராக உள்ளது” என தெரிவித்தார்.

விலைவாசி உயர்வு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, வங்கி மோசடி, விவசாயிகள் பிரச்சினை, பசு பாதுகாப்பு பெயரில் நடைபெறும் வன்முறைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

மழைக்கால கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை, பெண்கள் பாது காப்பு, ஜம்மு-காஷ்மீரில் நிர்வாக குளறுபடி, பாஜகவின் நிறைவேற் றப்படாத வாக்குறுதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்.

உச்ச நீதிமன்ற உத்தரவு காரண மாக எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் நீர்த்துப் போயுள்ளது. பசு பாதுகாப்பு என்ற பெயரால் நாடு முழுவதும் அப்பாவிகள் அடித்துக் கொல்லப்படுகின்றனர். இந்த விவகாரங்களையும் அவையில் எழுப்புவோம்.

மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பாக காங்கிரஸ் சார்பில் திங்கள்கிழமை நடந்த எதிர்க்கட்சி கள் கூட்டத்தில் 12 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்தன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.