நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் அனுமதி பெறாமல் இயங்கி வரும் சாயப்பட்டறைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் உள்ளன இதில் 50 சாயப்பட்டறைகள் மட்டுமே அனுமதி பெற்று இயங்கி வருகிறது. மற்றவை அனுமதியின்றி கள்ளத்தனமாக இயங்கி வருவதாகவும், இவற்றில் இருந்து வெளியேறும் சாயக்கழிவுகளில் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக காவிரி ஆற்றில் கலப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதனால் காவிரி ஆற்று நீர் மாசு ஏற்படுவதுடன் நிலத்தடி நீர் மற்றும் குடிநீர் மாசு ஏற்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் காரணமாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமல், அரசு அனுமதி பெறாமல் இயங்கும் சாயப்பட்டறைகளை கடந்த 10 ஆண்டுகளாக மாசு கட்டுப்பாட்டு துறையினரும், வருவாய்துறையினரும் சீல் வைப்பது, மின் துண்டிப்பது மற்றும் சாயப்பட்டறைகளை இடிப்பது என பல்வேறு நடவடிக்கைகளை அடுத்து வருகின்றனர். ஆனாலும் சாயப்பட்டறை உரிமையாளர்கள் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் சாயப்பட்டறைகளை மீண்டும் சீரமைத்து இயக்கி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.