நாளை பட்ஜெட் தாக்கல் செய்கிறார் குமாரசாமி: காங். எம்எல்ஏக்களுக்கு சித்தராமையா திடீர் விருந்து

கர்நாடகாவில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்வர் குமாரசாமி நாளை பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இதற்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வரும் முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு திடீரென விருந்து கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் மஜத மாநில தலைவர் குமாரசாமி தலைமையில் மஜத – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. முதல்வர் குமாரசாமி புதிதாக பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவெடுத்ததற்கு, முன்னாள் முதல்வர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நேரடி அனுமதி பெற்று, குமாரசாமி நாளை பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

இந்நிலையில் சித்தராமையா திடீரென நேற்றிரவு பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். இதில் பங்கேற்குமாறு காங்கிரஸை சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்க‌ளுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

முன்னாள் அமைச்சர் ராமலிங்க ரெட்டி சித்தராமையாவின் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தார். துணை முதல்வர் பரமேஷ்வர், முன்னாள் அமைச்சர் எம்.பி. பாட்டீல், சதீஷ் ஜார்கிஹோளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர், சித்தராமையாவின் விருந்து தேவையற்றது என கருத்து தெரிவித்தனர்.

நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் சித்தராமையா திடீரென விருந்து வழங்கியதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வர் குமாரசாமிக்கு எதிராக காங்கிரஸ் எம்எல்ஏக்களை ஒருங்கிணைப்பதற்காகவே சித்தராமையா இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக மஜதவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

காவிரி விவகாரம்

கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் கூறியதாவது: காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவு குறித்து கர்நாடக அரசு பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து வருகிறது. சட்ட நிபுணர்களிடமும், நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். அடுத்தகட்டமாக கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள், அரசியல் கட்சியினர், சட்டப்பேரவை, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளிட்டோரிடம் ஆலோசிக்க இருக்கிறோம். இதன் கூட்டம் பெங்களூருவில் வருகிற 6-ம் தேதி முதல் 10-ம் தேதிவரை நடைபெறும். இதில் விவசாயிகள் முன் வைக்கும் வாதத்தை பொறுத்து, கர்நாடக அரசு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.