நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் வெளியான சூப்பர் கிரைம் த்ரில்லர் இந்தப் படத்தை பார்க்க வேண்டிய படம்.

Secret obsession 2019

நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் வெளியான சூப்பர் கிரைம் த்ரில்லர் இந்தப் படத்தை பார்க்க வேண்டிய படம். முதல் காட்சியில் உயிருக்குப் போராடி ஓடிக் கொண்டிருக்கும் ஒரு இளம் பெண்ணை கையில் பிச்சுவாக் கத்தியுடன் துரத்தும் கொலைகாரன் என படம் மிரள வைக்கிறது. அடுத்தடுத்த காட்சிகளும் திகில்,மர்மம், பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் மிகச்சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளாகி நினைவிழக்கும் நாயகி ஜெனிபர் தமது பழைய நினைவுகளை மறந்துவிடுகிறாள் ( தமிழ் சினிமாவைப் பார்த்து சுட்ட கதை மாதிரி இருக்குல்லே..) கணவர் எனக் கூறிக் கொண்டு வருபவன் அவளை விரட்டிவந்த அந்த கொலைகாரன் தான் என்பதை புரிந்துக் கொள்ள நமக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.
மர்மக் கதை மன்னன் ஆல்பிரட் ஹிட்ச்காக் மர்மம் என்பது இரண்டு வகை என்பார். ஒன்று படம் பார்க்கும் ஆடியன்சுக்கு தெரிந்த விஷயம் படத்தின் பாத்திரங்களுக்கு மர்மமாக வைக்கப்பட்டிருக்கும். 👇🏾🌐
👆அல்லது கதாபாத்திரங்களுக்கு தெரிந்த ரகசியங்கள் படம் பார்க்கிறவர்களுக்கு மர்மமாக வைக்கப்பட்டிருக்கும். இந்த இரண்டையும் கலந்து இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. சில காட்சிகளில் பாத்திரங்களின் மர்மமும் சில காட்சிகளில் ஆடியன்சின் மர்மமும் மாறிமாறி படத்தை நகர்த்திச் செல்கின்றன.
ஜெனிபராக நடித்துள்ள பிரண்டா ஸ்நோ என்ற நடிகை கொள்ளை அழகு. உடல் கட்டை விடவும் முகபாவங்களில் பின்னுகிறார். அட்டகாசமான அவர் நடிப்பால் படத்தில் ஒன்றிவிடுகிறோம். இதே போல் டிடக்டிவாக வரும் நீக்ரோ நடிகர் டென்னிஸ் ஹேபர்ட்டின் நடிப்பையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். வில்லனாக வரும் மைக் வோகலும் சிறப்பாகவே தனது வக்கிரத்தை காட்டியுள்ளார். உணர்ச்சியை கோபத்தை உள்ளடக்கிய ஒரு வில்லன் பாத்திரம் புதிதாக இருக்கிறது.
படத்தின் இயக்குனர் பீட்டர் சுல்லியனும் ஒளிப்பதிவாளர் ஏய்ட்டன் அல்மோகரும் சான்பிரான்சிஸ்கோவின் காடுகள், மலைகளை அற்புதமாக கண்முன்நிறுத்தியுள்ளனர். இக்காட்சிகள் படத்தின் வேகத்திற்கு உதவுகின்றன. எல்லாவற்றையும் விட முதல் காட்சியில் இருந்தே படத்தின் பின்னணி இசை நம்மை ஆட்கொண்டுவிடுகிறது. இசையமைப்பாளர் ஜிம் டூலிக்கு சிறப்பு பாராட்டுகள்.🌐