நைஜீரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நாக் அவுட் சுற்றில் நுழைந்தது அர்ஜென்டினா: லயோனல் மெஸ்ஸி, மார்கஸ் ரோஜோ அசத்தல்

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் நள்ளிரவு டி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா 4-4-2 என்ற பார்மட்டிலும், நைஜீரியா 3-5-2 என்ற பார்மட்டிலும் களமிறங்கின. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்குள் நுழைய முடியும் என நெருக்கடியான நிலையில் களம்புகுந்த அர்ஜென்டினா தொடக்க நிமிடங்களில் வேகம் காட்டியது. கடந்த இரு ஆட்டங்களிலும் கோல்கீப்பராக செயல்பட்ட கப்ரெல்லோ நீக்கப்பட்டு அர்மானி களமிறக்கப்பட்டார். லயோனல் மெஸ்ஸி 14-வது நிமிடத்தில் அற்புதமாக கோல் அடித்து முன்னிலையை ஏற்படுத்திக் கொடுத்தார். நடு மைதானத்திலிருந்து ஒரு திகைக்கவைக்கும் பாஸை எவர் பனேகா அனுப்ப, வலது புறம் அதை அழகாக வாங்கிய மெஸ்ஸி தன் தொடையால் கட்டுப்படுத்தி பிறகு பந்து தரையில் படாமல் இடது காலால் தொட்டு பிறகு வலது காலினால் கோல் வலைக்குள் திணிக்க மைதானமே அதிர்ந்தது.

வெற்றிக்கான கோலை அடித்த மார்கஸ் ரோஜோவை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்த லயோனல் மெஸ்ஸி.

27-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு கோல் அடிக்க பொன்னான வாய்ப்பு கிடைத்தது. வலது புறத்தில் இருந்து மெஸ்ஸி பந்தை கொன்சாலோ ஹிகுவெய்னுக்கு பாஸ் செய்தார். அங்கு டிபன்டர்கள் இடையூறு இல்லாத நிலையில் கோல்கீப்பர் பிரான்சிஸ் ஸோஹோ மட்டுமே நேருக்கு நேர் சூழ்நிலையில் இருந்தார். ஆனால் ஹிகுவெய்ன் அதனை கோலாக்கத் தவறினார். 32-வது நிமிடத்தில் பனேகா கொடுத்த பாஸை ஏஞ்செல் டி மரியா நைஜீரியா தடுப்பைக் கடந்து ஊடுருவி எடுத்துச் சென்றார். ஆனால் அவரை லியான் பால்கன் ஃபவுல் செய்தார். இதற்காக வழங்கப்பட்ட ஃப்ரீ கிக்கில் மெஸ்ஸி இலக்கை நோக்கி துல்லியமாக அடித்த ஷாட்டை கோல்கீப்பர் ஸோகோ லேசாக தட்டிவிட பந்து கோல்கம்பத்தின் விளிம்பில் பட்டு வெளியே சென்றது. 39-வது நிமிடத்தில் மெஸ்ஸி உதவியுடன் பந்தை பெற்ற ஏஞ்சல் டி மரியா, இலக்கை நோக்கி அடித்த பந்து இடைமறிக்கப்பட்டது.

45-வது நிமிடத்தில் பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து நைஜீரியா வீரர் லியான் பால்கன் தலையால் முட்டிய பந்தை அர்ஜென்டினா கோல்கீப்பர் அர்மானி தடுத்தார். முதல் பாதியில் அர்ஜென்டினா 1-0 முன்னிலை பெற்றது. 48வது நிமிடத்தில் நைஜீரியாவின் லியான் பால்கனை, பெனால்டி பகுதிக்குள் வைத்து அர்ஜென்டினா வீரர் மஸ்சரானோ தள்ளிவிட்டதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து விஏஆர் தொழில்நுட்பம் மூலம் நைஜீரிய அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி விக்டர் மோசஸ் கோல் அடிக்க ஆட்டம் 1-1 என சமநிலையை அடைந்தது.

75-வது நிமிடத்தில் நைஜீரிய வீரர் அகமது மூசா இடது புறம் பந்தை வேகமாக எடுத்துச் சென்ற நிலையில் மஸ்சரானோ குறுக்கிட முயன்றார். இதனால் பந்தை உயரமாக பெனால்டி பகுதிக்குள் அடித்தார். அப்போது அங்கு அர்ஜென்டினா வீரர் மார்கஸ் ரோஜா பந்தை துள்ளியவாறு தலையால் முட்டினார். அந்த கணத்தில் பந்து அவரது தலையில் பட்டு அதன் பின்னர் கையில் உரசிய படி கீழே வர அதனை நைஜீரிய வீரர் ஒடியான் இகால்கோ, இலக்கை நோக்கி வலுவாக அடித்தார். ஆனால் பந்து கோல்கம்பத்தை விட்டு விலகிச் சென்றது. திடீரென சுதாரிப்படைந்த இகால்கோ, ரோஜோ கையில் பந்து பட்டத்தை சுட்டிக்காட்டி பெனால்டி கிக் வாய்ப்பு கேட்டார். இதைத் தொடர்ந்து ரெப்ரீ, விஏஆர் தொழில்நுட்ப உதவியை நாடினார். இதில் பெனால்டி கிக் கிடையாது என உறுதி செய்யப்பட்டது. இதனால் அர்ஜென்டினா அணி வீரர்கள் மட்டும் அல்ல.. மைதானத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்ளும் பெருமூச்சுவிட்டனர்.

80-வது நிமிடத்தில் ஹிகுவெய்னுக்கு கோல் அடிக்க மீண்டும் ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்தது. மார்கஸ் ரோஜாவிடம் இருந்து பாஸை பெற்ற அவர், அதனை விரயம் செய்தார். அருகில் மெஸ்ஸிக்கு பந்தை தட்டி விட்டிருந்தால் கூட அவர், அதனை கோலாக மாற்றிருக்க வாய்ப்பு உருவாகியிருக்கும். 86-வது நிமிடத்தில் பவோன் வலது புறத்தில் நின்ற மெர்கடோவுக்கு பந்தை பாஸ் செய்தார். அவர், அதை பாக்ஸ் பகுதியின் மையப்பகுதிக்கு கிராஸ் செய்ய அங்கு நின்ற மார்கஸ் ரோஜோ மின்னல் வேகத்தில் செயல்பட்டு வலது காலால் கோலின் இடது மூலையில் பந்தைச் செலுத்தினார். இதுவே அர்ஜென்டினா அணியின் வெற்றி கோலாக அமைந்தது. இதன் பின்னர் எஞ்சிய நிமிடங்களை விரயம் செய்வதிலேயே அர்ஜென்டினா அணி கவனம் செலுத்தியது. இதற்காக மெஸ்ஸிக்கு மஞ்சள் அட்டையும் காண்பிக்கப்பட்டது. முடிவில் அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 4 புள்ளிகளுடன் அர்ஜென்டினா நாக் அவுட் சுற்றுக்குள் கால்பதித்தது. 2-து தோல்வியை சந்தித்த நைஜீரியா தொடரில் இருந்து வெளியேறியது. அர்ஜென்டினா அணி நாக் அவுட் சுற்றில் வரும் 30-ம் தேதி சி பிரிவில் முதலிடம் பிடித்த பிரான்ஸ் அணியை சந்திக்கிறது.

Leave a comment

Your email address will not be published.