ஒருவரின் ஆயுள் காலம் எவ்வளவு என்பதை ரத்தப் பரிசோதனையில் கணக்கிடலாம்! – அசரவைக்கும் ஆய்வு முடிவு

அனைவருக்கும் பிறந்த தேதி தெரிவதைப்போல, இறக்கும் தேதியும் தெரிந்துவிட்டால் என்ன ஆகும்? `அதெல்லாம் சாத்தியமில்லை’ என்பவர்களை வாயடைக்கவைத்திருக்கிறது அண்மைய ஆய்வு ஒன்று! `ஒருவர் எத்தனை ஆண்டுகள் உயிரோடு வாழ்வார் என்பதை ரத்தப் பரிசோதனை மூலமே கண்டறிந்துவிடலாம்’ என்கிறது அந்த ஆய்வு.
அமெரிக்காவின் கனெக்டிகட் (Connecticut) பகுதியிலிருக்கும் யேல் (Yale) பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள்தாம் இந்த ஆய்வை மேற்கொண்டார்கள். இந்தப் பரிசோதனைக்காக, இரண்டு காலகட்டங்களில் மேற்கொண்ட ஆய்வுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் ஆய்வாளர்கள். ஒன்று, 1988-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டுவரை 10,000 பேரிடம் நடத்தப்பட்டது; மற்றொன்று, 1999-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டுவரை 11,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்டது. இந்த இரண்டு ஆய்வுகளும், அமெரிக்காவின், நேஷனல் ஹெல்த் அண்டு நியூட்ரிஷன் எக்ஸாமினேஷன் சர்வே (National Health and Nutrition Examination Survey – NHANES) சார்பாக நடத்தப்பட்டவை. ஒருவரின் உயிரியல் வயதுதான் (Biological Age) இந்த ஆராய்ச்சிக்கு அடிப்படை. அதைக் கண்டறிய உதவுவது ரத்தத்திலிருக்கும் பயாமார்க்கர்ஸ் (BioMarkers).
யேல் பல்கலைக்கழகத்தின் நோயியல் நிபுணர் மோர்கன் லிவைன் (Morgan Levine) இந்த ஆராய்ச்சி குறித்து விவரிக்கும்போது, `ரத்தப் பரிசோதனை மூலம் பயாலாஜிக்கல் வயது கணக்கிடப்படும். இந்த வயது, ஒருவர் விரைவாக முதுமையை நோக்கி நகர்கிறாரா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள உதவும். ஒருவரின் உறுப்புகளின் வளர்ச்சி, அவற்றின் செயல்பாடுகளைப் பொறுத்துதான் பயாலாஜிக்கல் வயது அமையும். பொதுவாக, உடலும் மனதும் இயல்புக்கு மீறி முதிர்ச்சியடைந்தால், பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் எளிதில் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அவர்களுக்கு, மரணமும் முன்கூட்டியே நிகழலாம். பிறந்த ஆண்டின் அடிப்படையில் கணக்கிடப்படும் வயதுக்கும், இந்த பயாலாஜிக்கல் வயதுக்கும் இருக்கும் வித்தியாசத்தைப் பொறுத்து முடிவுகள் சொல்லப்படும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். `இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்பவர்களில், யார் ஆரோக்கியமாக இருக்கிறார்கள், யார் ஆரோக்கியமில்லாமல் நாள்களை நகர்த்துகிறார்கள் என்பதையும் சொல்ல முடியும்’ என்கிறார்கள் ஆய்வாளர்கள். `ஆரோக்கியமில்லாமல் விரைவாக முதுமையை அடைபவர்களின் உடலில் என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பதைக் கண்டறிந்துவிட்டால் அவற்றைச் சரிசெய்துவிட முடியும்’ என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த ஆராய்ச்சியால் கிடைக்கும் முக்கியமான நன்மையாகவும் இதைத்தான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.