சென்னை: மக்களிடம் கருத்து கேட்காமல் பசுமை வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துவதை எதிர்த்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையிலிருந்து சேலத்திற்கு செல்லும் நேரத்தை குறைப்பதற்காக பசுமை வழிச்சாலையை அமைக்க மத்திய அரசு பரத்மாலா பரியோஜனா திட்டத்தின்கீழ் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தில் சென்னையிலிருந்து சேலம்வரை 277 கிலோ மீட்டர் தூரம் பசுமை வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்தவுள்ளது. இந்த பசுமை வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்யக்கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான ஜி.சுந்தரராஜன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்தும்போது சம்மந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த மக்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும். திட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டதிலிருந்து 21 நாட்களுக்குள் நடத்த வேண்டும். ஆனால், பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்தும் பணியை அவசர அவசரமாக நடத்தி வரும் தேசிய நெடுஞ்சாலைத் துறையும், தமிழக அரசும் பாதிக்கப்படும் கிராமங்களில் உள்ள பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்கவில்லை. விதிமுறைகளுக்கு முரணாக பசுமை வழிச்சாலை திட்டத்தை கொண்டுவந்திருப்பது சட்ட விரோதம். எனவே, இந்த திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஷேஷசாய் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் ராதாகிருஷ்ணன் ஆஜராகி, கடந்த 2013ல் கொண்டு வரப்பட்ட நெடுஞ்சாலை சட்டம் 105 பிரிவை ரத்து செய்ய வேண்டும். ஏனென்றால் இந்த சட்ட பிரிவின்படி நெடுஞ்சாலைக்காக நிலங்களை கையகப்படுத்தும் போது 105 பிரிவின் படி எந்த கருத்தையும் மக்களிடம் கேட்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
சமூக பாதிப்பு ஆய்வு அறிக்கை இல்லாமல் மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. எனவே, இந்த பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். மத்திய அரசு சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன் ஆஜராகி வாதிடும்போது, கடந்த 2015ல் மத்திய அரசு ஒரு அறிவிப்பாணை வெளியிட்டது. அதில் நெடுஞ்சாலைக்காக நிலத்தை கையகப்படுத்தும் போது மக்களுக்கு உரிய இழப்பீடு, மாற்று ஏற்பாடு, மறுவாழ்வு ஆகியவை குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது.
நில உரிமையாளர்கள் மட்டுமே இதுபோன்ற வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், பொதுநல வழக்காக மனுதாரர் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்று வாதிட்டார். இதையடுத்து, தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு சந்தை மதிப்பைவிட 3 மடங்கு கூடுதலாக இழப்பீடு வழங்கப்படவுள்ளது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு ஜூலை 12ம் தேதி பதில் மனு தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
* சென்னையிலிருந்து சேலம் வரை 277 கிமீ தூரம் பசுமை வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது.
* விவசாய நிலங்கள் வழியாக இந்த திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்துகிறது.
* அறிவிப்பை வெளியிட்டதிலிருந்து 21 நாளுக்குள் பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும்.
* ஆனால், நிலத்தை கையகப்படுத்தும் பணியை அவசர அவசரமாக நடத்துகிறது அரசு,
* பாதிக்கப்படும் கிராமங்களில் உள்ள பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்கவில்லை.