பசுமை வழிச்சாலை: மக்கள் சந்திப்பு நடத்த பாமக திட்டம்

பசுமை வழிச் சாலை அமையவுள்ள திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் வரும் 26, 27 தேதிகளில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்த பாமக திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில் ‘‘தமிழ்நாட்டில் யார் குடி எங்கு கெட்டாலும் பரவாயில்லை… எஜமானர்களின் ஆணைப்படி எட்டு வழி சென்னை- சேலம் பசுமைவழி சாலையை நிறைவேற்றியே தீருவது என வெறி கொண்டிருக்கும் தமிழக அரசு, அதற்காக கட்டவிழ்த்து விட்டிருக்கும் அடக்குமுறைகளும், அதிகார அத்துமீறல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஜனநாயகத்தை சாகடிக்கும் இத்தகைய அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கும், மேற்கு மாவட்டங்களின் நுழைவாயிலாகத் திகழும் சேலம் நகருக்கும் இடையே வலிமையான, வசதியான சாலைக் கட்டமைப்பு இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. ஆனால், சென்னையிலிருந்து சேலத்திற்கு உளுந்தூர்பேட்டை வழியாக ஒரு தேசிய நெடுஞ்சாலை, வேலூர், கிருஷ்ணகிரி வழியாக இன்னொரு நெடுஞ்சாலை என இரு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையிலிருந்து திண்டிவனம் -கிருஷ்ணகிரி வழியாக மூன்றாவது தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இவை தவிர மாநில சாலைகளும் உள்ளன. இவ்வளவும் போதாதென சேலத்திற்கு புதிதாக 8 வழி சாலை அமைக்க வேண்டிய தேவை என்ன? என்பது தான் ஒட்டுமொத்த தமிழகமும் எழுப்பும் வினா ஆகும். இந்த வினாவுக்கு இன்று வரை ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் பதிலளிக்காத தமிழக அரசு, பசுமைவழி சாலைக்கான நிலம் அளவீடு உள்ளிட்ட பணிகளை மக்கள் எதிர்ப்பை மதிக்காமல் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

ஜனநாயகம் என்பதே மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சி என்பது தான். ஆனால், தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி ஜனநாயகத்தின் எந்த இலக்கணத்திற்கும் பொருந்துவதாகத் தெரியவில்லை. கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் நடைபெறும் நிகழ்வுகள் 43 ஆண்டுகளுக்கு முன் கட்டவிழ்த்து விடப்பட்ட நெருக்கடி நிலை காலத்தை நினைவூட்டுவதாகவே உள்ளன. பசுமை சாலைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற தேவை உண்மையாகவே இருந்தால், அது குறித்து மக்களுக்கு விளக்கி, அவர்களின் ஒப்புதல் பெற்று திட்டத்தை நிறைவேற்றுவது தான் சரியானதாக இருக்கும்.

இத்திட்டத்தின் சிறப்புகள் பற்றி வீர வசனங்கள் பேசும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து இத்திட்டத்தால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை ஆதாரங்களுடன் விளக்கி அவர்களை சமாதானப்படுத்தலாமே… அதை செய்வார்களா?

அதை செய்வதற்கு பதிலாக, தேவையே இல்லாத இத்திட்டத்தை, கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காக மக்கள் தலையில் திணிப்பதை எவ்வாறு ஏற்க முடியும்? பசுமை சாலைத் திட்டத்தின் முழு விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை; மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி ஒப்புதல் பெறப்படவில்லை; ஆனால், மக்களின் வாழ்வாதாரமாக திகழும் நிலங்களை அடிமாட்டு விலைக்கு கையகப்படுத்த, அவற்றில் அளவீடு செய்யப்படுகிறது. இதை அம்மக்களால் எப்படி சகித்துக் கொள்ள முடியும்? இந்த அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் விவசாயிகளையும், பொதுமக்களையும் கைது செய்வது அராஜகத்தின் உச்சம்.

சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள இரும்புத்தாது உள்ளிட்ட இயற்கை வளங்களை கார்ப்பரேட் நிறுவனம் சுரண்டி எடுத்துச் செல்வதற்கு வசதியாகவே மக்களின் வரிப்பணத்தில் இந்த சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலையை அமைத்து விட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு எந்த அளவுக்கு கீழிறங்கி நடந்து கொள்கிறது?

அரசின் இந்த அநீதியை எதிர்த்துப் போராடுவதில் ஏழை விவசாயிகள் எந்த அளவுக்கு உறுதியாக உள்ளனர் என்பதற்கு இரு நாட்களுக்கு முன் சேலம் மாவட்டம் அடிமலைப்புதூரில் மூதாட்டி ஒருவர் கைது செய்யப்பட்டதும், அதன்பின் நடந்த நிகழ்வுகளும் தான் உதாரணம். தனது நிலத்தை கையகப்படுத்தக்கூடாது என்று தரையில் விழுந்த கதறிய மூதாட்டியை காவலர்கள் கைது செய்தனர். கைதுக்கு அஞ்சாமல் நிலத்தை இழப்பதை விட, போராடி சிறை செல்வது மேல் என்று முழக்கமிட்டு சென்ற அந்த மூதாட்டி ஜான்சி ராணியாகவே மக்களால் பார்க்கப்படுகிறார்.

ஆட்சியும், அதிகாரமும் கைகளில் இருக்கிறது; அதற்கும் மேலாக சர்வ வல்லமை பொருந்திய மத்திய ஆட்சியாளர்களின் ஆதரவும் இருக்கிறது என்பதற்காக ஆடக்கூடாத ஆட்டங்களையெல்லாம் ஆடினால், அனுபவிக்கக்கூடாத தண்டனைகளையெல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கும் என்ற நியதியை பினாமி ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது. மண்ணுக்கான உரிமைப் போரில் சர்வ வல்லமை படைத்த பல சக்கரவர்த்திகள், சாதாரண மக்களிடம் மகுடத்தை இழந்திருக்கிறார்கள் என்ற உண்மையை உணர்ந்து, பசுமைவழி சாலை விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை மதித்து மாநில அரசு நடந்து கொள்ள வேண்டும்.

பசுமைவழி சாலையை எதிர்ப்பவர்கள் அனைவரும் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்பவர்கள் அலறுவது கேலிக்கூத்தானது. தமிழகத்தின் பொருளாதாரத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய சேதுசமுத்திரத் திட்டத்தை கற்பனைக் காரணத்தைக் காட்டி தடுத்தவர்களும், கையூட்டு கிடைக்காததால் தொழில் வளர்ச்சிக்கு வழி வகுக்கக்கூடிய மதுரவாயல்- துறைமுகம் பறக்கும் பாலம் திட்டத்தை 8 ஆண்டுகளாக முடக்கி வைத்திருப்பவர்களும் வளர்ச்சியைப் பற்றி பேசுவதை விட சிறந்த நகைச்சுவை எதுவும் இருக்கமுடியாது.

பாட்டாளி மக்கள் கட்சி வளர்ச்சிக்கு எதிராக கட்சி அல்ல. ஆனால், ஒரு நிறுவனம் வாழ்வதற்காக 7500 குடும்பங்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. மக்களை சொந்த ஊரில் அனாதைகளாக்கும் பசுமைச் சாலை திட்டம் கைவிடப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, பசுமைவழிச் சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படவுள்ள காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் வரும் 26, 27 ஆகிய தேதிகளில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தவுள்ளது.

பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பு மற்றும் கருத்துக் கேட்பு கூட்டங்களில் உழவர் அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டு நிறுவனத்தினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்பார்கள். இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம், நேரம் உள்ளிட்ட விவரங்கள் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்’’ என ராமதாஸ் கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published.