
சட்டசபையில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
தமிழ்நாடு காவல் துறையில், 1-6-2018 அன்றைய நிலவரப்படி, அனைத்து பதவிகளிலும் அனுமதிக்கப்பட்ட இடங்கள் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 235 ஆகும். இதில் பணியில் உள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 586 ஆகும். தற்போது காலியாக உள்ள பணியிடங்கள் 10,649 ஆகும்.
காலியாக உள்ள காவலர் பணியிடங்களில் 5,538 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் 28-12-2017 அன்று அறிவிக்கை வெளியிட்டு, அதற்கான தொடர் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
மேலும், 1,480 சார்பு ஆய்வாளர்கள், தொழில்நுட்பம் மற்றும் விரல்ரேகை பிரிவு சார்பு ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியிட உள்ளது. இத்துடன், 34 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் பணியிடங்களுக்கு நபர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கை வெளியிட்டு, நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், 56 துணைக் காவல் கண்காணிப்பாளர்களை தேர்வுசெய்ய விரைவில் அறிவிக்கை வெளியிடப்பட உள்ளது. இவர்கள் அனைவரும் பயிற்சி முடித்து பணியில் சேரும்போது, தற்போதுள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு கணிசமாக குறையும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் நலன் காக்கும் அரசில், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரின் பணி என்பது ஒரு மகத்தான பணியாகும். இதில் அவர்கள் பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காவல் துறையினரின் சீரிய பணியை பாராட்டி, அவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைக் கருத்தில் கொண்டு, குறைந்தபட்சம், அவர்கள் மீது வசைபாடுவதையாவது நிறுத்தி, அவர்களை புண்படுத்தாமல், அவர்களது அன்றாட பணிகளை ஊக்கத்துடன் செய்ய நாம் துணை நிற்க வேண்டும்.
அதே தருணத்தில், அவர்கள் தவறு செய்ததாக தெரிந்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயங்காது என்பதையும் இந்த நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, ஒவ்வொரு வருடமும், தடய அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் இரண்டு அறிவியல் அறிஞர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவில் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் தடய அறிவியல் துறையில் சிறந்தோருக்கான விருது இந்தாண்டு முதல் வழங்கப்படும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.