பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர்களுக்கு ஆட்டோமொபைல் பயிற்சி!

மக்களின் அடிப்படை உரிமைகளான கல்வியும் மருத்துவமும் கிடைக்கப்பெறாத கிராமங்கள் இன்னும் இந்நவீன இந்தியாவில் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. அதேசமயம், உலகிலேயே அதிக இளைஞர்கள் கொண்ட நாடு இந்தியா தான். ஆனால், குடும்பத்தின் வறுமைச் சூழலின் காரணமாகவும், படிப்பில் நாட்டமில்லாமலும் பள்ளிப் படிப்பைத் தொடராமல் சொற்ப சம்பளத்திற்காக நாள் முழுவதும் வேலை செய்யும் நிலையில்தான் பெரும்பாலான இந்திய இளைஞர்கள் உள்ளனர் என்பது கவலைக்குரியது.

பள்ளிப் படிப்பை இப்படி பாதியில் நிறுத்தியவர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் வகையில் அவர்களுக்கு தொழிற்கல்வி கற்றுக் கொடுத்து அவர்களைச் சுயதொழிலில் ஈடுபட வழிவகை செய்கிறது யுனிவர்சல் சேவக் யுனிவர்சிட்டி டிரஸ்ட். பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு சென்னையில் கிளை நிறுவனம் அமைத்து செயல்படுகிறது இத்தன்னார்வத் தொண்டு அமைப்பு. பல்வேறு காரணங்களால் பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்ட மாணவர்கள் தங்கள் சுய திறனை அறிந்துகொண்டு செயல்படும் வகையில் பல பயிற்சிகளை அளிக்கிறது.

அவற்றில் முக்கியமானது ஆட்டோமொபைல் பயிற்சி. தொழிற்பயிற்சியை மட்டும் வழங்காமல் சிறப்பான வாழ்க்கை வாழ வாழ்க்கைக் கல்வியும் சேர்த்து கற்றுக் கொடுக்கப்படுகின்றது. இந்திராகாந்தி திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தோடும் மற்றும் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி அமைப்போடும் இணைந்து தொழிற்கல்வி படிப்புகளை வழங்கி வரும் இவ்வமைப்பு உருவான விதத்தைப் பற்றி நம்மோடு பகிர்ந்துகொண்டார் இவ்வமைப்பின் பொறுப்பாளரான சசிகலா.

“வறுமை தன்னை வாட்டினாலும் பரவாயில்லை, தன் குழந்தையை எப்படியாவது படிக்க வைத்து அவர்கள் வாழ்வை வளமாக்க வேண்டும்  என்று எண்ணும் பெற்றோர்கள் இருக்கும் இந்த இந்தியாவில்தான், ‘இங்க  சாப்பாட்டுக்கே வழியில்லையாம் இவரு படிக்க போறாராம். படிச்சி கிழிச்சதெல்லாம் போதும்… போய் வேற வேலை ஏதாவது பாரு’ என்று சொல்லக்கூடிய ஒரு சில பெற்றோர்களும் உள்ளனர். இந்தக் காரணத்தினாலேதான் இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான குழந்தைகள் படிப்பைத் தொடர முடியாமல் கூலி வேலைக்குச் செல்கின்றனர்.

நம் மக்களின் இம்மனநிலையை மாற்றி ஏழ்மை காரணமாகவும், மற்ற காரணங்களுக்காகவும் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்களுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்குவதே தன் லட்சியமாகக்கொண்டு பெங்களூரூவைச் சேர்ந்த எங்கள் நிறுவனத் தலைவர் ஆச்சார்ய வினய் வினேக்கர் இந்த அறக்கட்டளையை 2008ம் ஆண்டு நிறுவினார்.

மனிதனாகப் பிறந்த அனைவருக்குள்ளும் அவருக்கே உரித்தான தனித்திறன் ஒன்று ஒளிந்துகொண்டு இருக்கும். அதை இனம் கண்டு அதற்கேற்றவாறு மாணவர்களைச் செதுக்க வேண்டும் என்பதை எங்கள் பிரதான கொள்கையாகக் கொண்டு 2009ம் ஆண்டிலிருந்து திட்டங்கள் வகுக்கக் தொடங்கினோம்.

ஆட்டோமொபைல் பயிற்சியை  வழங்குவது தான் எங்கள் திட்டத்தின் முதல் படி. 2010ம் ஆண்டு இந்திராகாந்தி பல்கலைக்கழகத்தில் இருந்தும், இந்தியன் சொசைட்டி ஃபார் தி டெக்னிக்கல் எஜுகேஷன் என்ற அமைப்பிலிருந்தும் வந்து பார்வையிட்டு பயிற்சிகளை வழங்கவும், சான்றிதழ் வழங்கவும் அனுமதி அளித்தார்கள்” என்ற சசிகலா தாங்கள் வழங்கும் தொழிற்பயிற்சி குறித்து விளக்கலானார்.

“2011ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஆறுமாதக் குறுகிய காலப் பயிற்சி வகுப்புகளை நடத்திவருகின்றோம். இவ்வகுப்புகளில் எட்டாம் வகுப்பு வரை படித்த 17 முதல் 21 வயது வரையுள்ள மாணவர்களைச் சேர்த்துக்கொள்கிறோம். கல்வியை இலவசமாக அளித்து பயிற்சிக்கான கட்டணம் வசூலிக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.

டி.எஸ்.சி ஹுண்டாய் மோட்டார் மற்றும் ரெனால்ட்  நிறுவனத்துடன் இணைந்து  ஆட்டோமொபைல் பயிற்சிகளில் அடிப்படை செயல்பாடு மற்றும் பராமரிப்பு, ஆட்டோமொபைல் எலக்ட்ரிக்கல் வொர்க்ஸ், ஆட்டோமொபைல் பழுது பார்க்கும் பணிகள், ஆட்டோமொபைல் பெயின்டிங் என நான்கு சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன. பயிற்சிகளில் பங்குபெறும் மாணவர்களுக்கு வகுப்பறைப் பயிற்சிகளையும், நேரடி செயல்பாடு பயிற்சிகளையும் ஹுண்டாய் நிறுவனத்தின் அதிகாரிகள், பணியாளர்கள் வழங்கிவருகின்றனர்.

பயிற்சிக் காலம் முடிந்ததும் மொத்தமாக ஒரு தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்குகிறோம். மேலும் மாருதி, ஹுண்டாய், ஃபோர்டு போன்ற மோட்டார் நிறுவனங்களில் நடத்தப்படும் கேம்பஸ் இன்டர்வியூக்களில் பங்குபெறச் செய்கிறோம். இங்கு பயிற்சி முடித்த எங்கள் மாணவர்களில் சிலர் வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர்.

சிலர் இங்கேயே உள்ள ஹுண்டாய் போன்ற பெரிய நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். மேலும் சுயமாகத் தொழில்முனைய விரும்புவோருக்குத் தனியாக ஒர்க்‌ஷாப் வைப்பதற்கு வங்கிக் கடன் பெற்றுத் தருகிறோம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் பயிற்சி மேற்கொள்ள வருகின்றனர்” என பெருமிதத்தோடு கூறிய சசிகலா, நாங்கள் தொழிற்பயிற்சியோடு சேர்த்து வாழ்க்கைக் கல்வியும் கற்றுக் கொடுக்கிறோம் என்கின்றார்.

“தனக்குள் இருக்கும் தன்னை அறிவதற்குச் சிறந்த வழி தியானமே. மனதும் உடலும் ஒரே நேர்க்கோட்டில் பயணித்தால் தான் அவர்களுக்குள்ளே இருக்கும் திறமையை வெளிக்கொணர முடியும். ஒவ்வொரு குழுவிலும் மாணவர்கள் சேர்ந்த முதல் பத்து நாட்கள் தியானப் பயிற்சிகளைக் கற்றுக் கொடுக்கின்றோம். இந்த பத்து நாட்கள் இடைவெளியானது ஒழுக்கம், மரியாதை, சக மனிதனை மதித்தல், நேரம் தவறாமை ஆகியவற்றின் அர்த்தங்களை மாணவர்கள் கற்க உதவும்.

இங்கு வரும் மாணவர்களுக்குத் தியானப் பயிற்சி அளித்து அவர்களின் சுய திறனை அவர்களுக்கே அறிமுகம் செய்கின்றோம். மேலும் சனிக்கிழமை என்பது பாடப் புத்தகங்களுக்கு வேலையில்லாத நாளாகவே நாங்கள் கருதுகிறோம். ஆகையால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு, முதல் உதவிக் கருத்தரங்கு, போக்குவரத்துச் சட்ட விதிகளுக்கான வகுப்புகள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்த விழிப்புணர்வு, தோட்டக்கலை, மரம் நடுதல், விளையாட்டுப் போட்டிகள் என்பன போன்ற பல கருத்தரங்குகளை ஒவ்வொரு சனிக்கிழமையிலும் நடத்திவருகிறோம்” என்றார்.

“அனில் அம்பானி, பில்கேட்ஸ் போன்ற உலகத்தின் மிகப்பெரிய மனிதர்கள் கூட மெத்தப் படிக்காதவர்கள் தான் என்றாலும் இன்று உலகமே வியந்து பாராட்டும் வகையில் வாழ்கின்றனர். ஆகையால், படிக்காதவர்களுக்கும், படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்களுக்கும் கூட உழைப்பில் ஆர்வமும், முயற்சியும் இருந்தால் செழுமையான எதிர்காலம் ஒன்று காத்து இருக்கிறது என்பதை நம் மக்கள் அனைவருக்கும் எங்கள் மாணவர்கள் மூலம் உணர்த்தவேண்டும். அந்தத் தரத்தில் எங்கள் மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கையாகக் கொண்டு செயல்படுகிறோம்” என நம்பிக்கையூட்டும் விதமாக முடித்தார் சசிகலா.

Leave a comment

Your email address will not be published.