பழனி: பழனி அருகே தனியாருக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில் இருந்து கழிவுகள் முறையாக அகற்றப்படாததால், நோய் பாதிப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வத்தக்கவுன்டன்வலசு கிராமத்தில், சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான மணி பிராய்லர்ஸ் என்ற கோழிப்பண்ணை உள்ளது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகளைக் கொண்டு விவசாய நிலங்களுக்கு மத்தியில் மிகப்பெரிய இந்தக் கோழிப் பண்ணை இயங்கி வருகிறது. கோழிப்பண்ணையில் இருந்து கோழிக் கழிவுகளை முறையாக அகற்றுவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடுமையாக துர்நாற்றம் வீசுவதோடு, கழிவுகளில் இருந்து உற்பத்தியாகும் ஈக்கள் கும்பல், கும்பலாக அப்பகுதியிலுள்ள வீடுகளுக்குள் படையெடுக்கத் தொடங்கியுள்ளன.
உணவுப் பொருட்கள், சமையலறைப் பாத்திரங்கள், குடிக்கும் தண்ணீர், கொடியில் உலரும் துணிகள் என எங்கு நோக்கினும் ஈக்களாக காட்சியளிக்கிறது. இதனால் தங்களுடைய இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருவதாகவும் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளைச் சந்தித்து மனு அளித்தும், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை என்று கூறும் கிராம மக்கள், உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழனி அருகே முறையாக கழிவுகளை அகற்றாமல் தனியார் கோழிப்பண்ணை அடாவடி : பொதுமக்கள் கடும் அவதி
