பழைய அம்சங்களுடன் எஸ்சி, எஸ்டி மசோதா நடப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பழைய அம்சங்களை மீண்டும் புகுத்துவது தொடர்பான சட்ட மசோதா நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே நிறை வேற்றப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம், கடுமையான சில பிரிவு களை நீக்கி கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு அந்த சட்டத்தை நீர்த்துப்போகச் செய்துள்ளதாக பல்வேறு அரசியல் கட்சியினரும் தலித் அமைப்பினரும் குற்றம்சாட்டினர்.

இந்த சட்டத்தை மீண்டும் கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு தலித் அமைப்புகள் அழைப்பு விடுத் திருந்தன.

இந்நிலையில், மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தின்போது இந்தப் பிரச்சினையை எழுப்பிய காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “கடந்த சில மாதங்களில் மத்திய அரசு எத்தனையே அவசர சட்டங்களை கொண்டுவந்தது. இதுபோல எஸ்சி, எஸ்டி சட்டத்தை மீண்டும் கடுமையாக்கவும் அவசர சட்டம் கொண்டு வந்திருக்க வேண்டும்” என்றார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும் போது, “எஸ்சி, எஸ்டி சட்டத்தை மீண்டும் கடுமையாக்குவது தொடர்பான புதிய சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச் சரவை 1-ம் தேதி ஒப்புதல் வழங்கி உள்ளது. எனவே, இந்த மசோதாவை நடப்பு நாடாளு மன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற அரசு விரும்புகிறது” என்றார்.

Leave a comment

Your email address will not be published.