பலாத்கார குற்ற வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும் 1,023 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளிலும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதைத் தொடர்ந்து 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்க வகை செய்யும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அவசர சட்டத்துக்கு மாற்றாக, கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பாலியல் பலாத்காரங்
கள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
விரைவு நீதிமன்றங்கள் அமைப் பது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் விரிவாக ஆலோசனை நடத்தி மதிப்பீடு அறிக்கை தயாரித்தது. பெண்கள், குழந்தை
கள் மீதான பாலியல் பலாத்கார வழக்குகளை விரைந்து விசாரிக்க மத்திய அரசின் புதிய திட்டத்தின்படி, நாடு முழுவதும் 1,023 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. இந்த நீதிமன்றங்களை அமைக்க ரூ.767.25 கோடி செலவாகும் என்றும் இதில் மத்திய அரசு தனது பங்காக ரூ.464 கோடி வழங்க வேண்டும் என்றும் சட்ட அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரை அறிக்கை உள்துறை அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலாத்கார வழக்குகளை விசாரிப்பதற்காக காவல் நிலையங்கள், மருத்துவமனைகளுக்கு சிறப்பு உபகரணங்கள் வழங்கவும் பலாத்கார வழக்குகளில் புலனாய்வு செய்யவும் அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு தடயவியல் ஆய்வகம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
குழந்தைகளுக்கு எதிரான பலாத்கார வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்றும் அனைத்து மாநில உயர் நீதிமன்றங்களும் 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து பலாத்கார வழக்குகளின் நிலவரத்தை கண்காணிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மத்திய சட்ட அமைச்சகத்தின் அறிக்கையில் உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைகளும் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது