பிஎம்டபிள்யூ G310R மற்றும் G310GS பைக்ஸ் பற்றி 5 தகவல்கள்!

பைக் ஆர்வலர்களுக்கு, தனித்துவமாகக் காட்சியளிக்கும் பிஎம்டபிள்யூ பைக்குகளை வாங்கவேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும்.

பைக் ஆர்வலர்களுக்கு, தனித்துவமாகக் காட்சியளிக்கும் பிஎம்டபிள்யூ பைக்குகளை வாங்கவேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும்; ஆனால் அவர்கள் விலையைக் கேட்கும்போதே மலைப்பாகி, பின்னர் சர்வீஸ் செலவுகளைப் பற்றிக் கேள்விப்படும்போது தலைதெறிக்க ஓடிக்கொண்டிருப்பதைப் பார்க்கமுடியும். ஆனால், இப்போது அதற்கான தீர்வை, பிஎம்டபிள்யூ நிறுவனமே கண்டுபிடித்திருக்கிறது! ஆம், 2 ஆண்டுகாலக் காத்திருப்பின் பலனாக, G310R மற்றும் G310GS ஆகிய பைக்குகளை, முறையே 2.99 லட்சம் ரூபாய் மற்றும் 3.49 லட்ச ரூபாய்க்கு (விலைகள் அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம்) அந்நிறுவனம் களமிறக்கியுள்ளது. இந்த பைக் பற்றிய தகவல்களைத் தற்போது பார்ப்போம்.

பிஎம்டபிள்யூ

டிவிஎஸ் – பிஎம்டபிள்யூ இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ஒசூரில் அமைந்திருக்கும் டிவிஎஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையில்தான், G310R மற்றும் G310GS பைக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இவை முதன்முறையாகக் காட்சிபடுத்தப்பட்டபோது, அந்த ஆண்டின் இறுதியில் பைக் விற்பனைக்கு வரும் எனச் சொல்லப்பட்டது. ஆனால் G310R மற்றும் G310GS பைக்குகளுக்கு உருவாகப்போகும் சந்தை மதிப்பை மனதில்வைத்து, தனது பைக் டீலர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கத்தில், பிஎம்டபிள்யூ இந்த பைக்குகளை 2017-ல் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் G310GS பைக்கை முதன்முறையாகக் காட்சிபடுத்திய கையோடு, G310R பைக்கும் பார்வைக்கு வைக்கப்பட்டது.

கட்டுமஸ்தான 11 லிட்டர் பெட்ரோல் டேங்க், ஹாலோஜன் பல்ப் உடனான க்யூட் ஹெட்லைட், கச்சிதமான சைஸ், சிங்கிள் பீஸ் சீட் மற்றும் ஹெட்லைட் என G310R, S1000R போன்ற ஒரு நேக்கட் பைக்காக பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. இதுவே G310GS என்றால் ஷார்ப்பான முன்பக்க மட்கார்டு, சிறிய விண்ட் ஷீல்டு, லக்கேஜ் Rack, Dual Purpose டயர்கள், Long Travel சஸ்பென்ஷன், இன்ஜின் கார்டு என பிஎம்டபிள்யூவின் R1200GS போன்ற ஒரு அட்வென்ச்சர் பைக்காகக் கவர்கிறது. இவை ஏற்கெனவே ஐரோப்பிய மற்றும் அமெரிக்கச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனையாகின்றன. அப்பாச்சி RR 310 பைக்கில் ப்ரொஜெக்டர் ஹெட்லைட் – LED இண்டிகேட்டர்கள் இருக்கும் நிலையில், இங்கே ஹாலோஜன் ஹெட்லைட் மற்றும் வழக்கமான பல்ப் கொண்ட இண்டிகேட்டர்கள்தாம்!

G310R மற்றும் G310GS பைக்கில் இருக்கும் அதே இன்ஜின்தான், டிவிஎஸ் அப்பாச்சி RR310 பைக்கிலும் இருக்கிறது! எக்ஸாஸ்ட் பைப் இருக்கும் சிலிண்டர் பகுதி, 180 டிகிரி திருப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பைக்கின் காம்பேக்ட்டான வீல்பேஸுடன் ஒப்பிடும்போது, நீளமான ஸ்விங் ஆர்மைப் பொருத்த முடிந்ததாக பிஎம்டபிள்யூ தெரிவித்திருக்கிறது. G310R மற்றும் G310GS பைக்குகளில் இருப்பது, 4 வால்வ் – DOHC – லிக்விட் கூல்டு – சிங்கிள் சிலிண்டர் – 313சிசி இன்ஜின் – 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி. இவை டிவிஎஸ் அப்பாச்சி RR310 பைக் போலவே, 34bhp பவர் மற்றும் 2.8kgm டார்க்கையே வெளிப்படுத்துகின்றன.

143 கிமீ டாப் ஸ்பீடு மற்றும் 30 கிமீ அராய் மைலேஜ் என டெக்னிக்கல் விவரங்களில், இரண்டு பிஎம்டபிள்யூ பைக்கும் சமமாகவே இருக்கின்றன. ஆனால் எடையில் வித்தியாசம் உண்டு (G310R – 158.5 கிலோ; G310GS – 169.5 கிலோ). எனவே, ஆன்ரோடு பர்ஃபாமென்ஸில் என்ன வித்தியாசம் இருக்கும் என்பதை, பைக்குகளை ஓட்டும்போதுதான் தெரியும். இதைவிட விலைகுறைவான கேடிஎம் டியூக் 390 – பஜாஜ் டொமினார் – கவாஸாகி நின்ஜா 300 ஆகிய பைக்குகளில் ஸ்லிப்பர் க்ளட்ச் இருக்கும் நிலையில், பிஎம்டபிள்யூ பைக்குகளில் வழக்கமான க்ளட்ச்தான்!

G310R மற்றும் G310GS பைக்கில் இருப்பது, அதே 41மிமீ USD ஃபோர்க் மற்றும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன்தாம். ஆனால், G310R பைக்குடன் ஒப்பிடும்போது (முன்: 140மிமீ டிராவல்; பின்:131மிமீ டிராவல்), G310GS பைக்கின் ஃபோர்க் அதிக டிராவலைக் கொண்டுள்ளது (முன் & பின்: 180மிமீ).  அதேபோல G310R பைக்கின் இருபுறமும் 17 இன்ச் வீல்களில் மிஷ்லின் இருக்கும் நிலையில், G310GS பைக்கின் முன்பக்கத்தில் 19 இன்ச் வீல்களும் – பின்பக்கத்தில் 17 இன்ச் வீல்களும் இருக்கின்றன (Metzeler டயர்கள்). ஆனால், பிரேக்ஸ் விஷயத்தில், இரண்டு பைக்குகளுமே ஒன்றுதான்! (முன்: 300மிமீ டிஸ்க் – பின்: 240மிமீ டிஸ்க்) டூயல் சேனல் ஏபிஎஸ் ஸ்டாண்டர்டாக இருப்பது வரவேற்கத்தக்கது. தேவைபட்டால், G310GS பைக்கில் ஏபிஎஸ் அமைப்பை ஆஃப் செய்துகொள்ளலாம்; G310R பைக்கில் அது முடியாது

G310R & G310GS

இந்த பைக்குகளின் ஒட்டுமொத்தத் தரத்தில் அசத்திவிட்டது பிஎம்டபிள்யூ; ஆனால் லேட்டாக ஆட்டத்துக்கு வந்திருந்தாலும், தனது பைக்குகளின் விலை விஷயத்தில் அந்நிறுவனம் சமரசம் செய்யவில்லையோ எனத் தோன்றுகிறது. ஆம் கேடிஎம் டியூக் 390 பைக்கைவிட G310R பைக்கின் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை 57,000 ரூபாய் அதிகம்; மேலும் இதே விலையில், சமீபத்தில் உள்நாட்டு உதிரிபாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நின்ஜா 300 பைக்கை அறிமுகப்படுத்தியது கவாஸாகி; இதுவே கவாஸாகி வெர்சிஸ் X-300 பைக்குடன் ஒப்பிடும்போது (4.69 லட்ச ரூபாய் – டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை)

1.2 லட்ச ரூபாய் விலை குறைவாக இருக்கிறது G310GS. ஆனால், இதே பைக்கின் விலையில், ஏறக்குறைய 2 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்குகளை வாங்கமுடியும்! G310R மற்றும் G301GS பைக்குகளுக்கான பொதுவான ஆக்ஸசரிகளாக, உயரத்தைக் குறைக்கு சீட் – 12V சாக்கெட் – லக்கேஜ் பாக்ஸ் – LED இண்டிகேட்டர்கள் –  சாட்டிலைட் நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் அதற்கான மவுன்ட் ஆகியவை உள்ளன. G310R பைக்குக்கு எனப் பிரத்யேகமாக Comfort சீட் மற்றும் G310GS பைக்குக்கு எனப் பிரத்யேகமாக Tank Rucksack வழங்கப்பட்டுள்ளன.

G310R & G310GS

இரண்டு பிஎம்டபிள்யூ பைக்குகளுமே 3 கலர்களில் அறிமுகமாகியுள்ள நிலையில், G310R (Style HP) மற்றும் G310GS (Pearl Metallic) கலர் ஆப்ஷன்களின் விலை, வழக்கத்தைவிட 10,000 ரூபாய் விலை அதிகம்! G310R மற்றும் G310GS பைக்குகளுக்கு, 3 வருடம்/Unlimited Kms வாரன்டி ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. தேவைபட்டால் 4-வது மற்றும் மற்றும் 5-வது வருடத்துக்கு வாரன்டியை நீட்டித்துக் கொள்ளலாம். அதேபோல EMI முறையில் வாங்கும்போது, G310R பைக்குக்கு 6,999 ரூபாயும் G310GS பைக்குக்கு 7,999 ரூபாயும் மாதத்துக்குச் செலுத்தினாலே போதுமானது! இது RSA சேவைக்கான தொகையையும் சேர்த்துதான் மக்களே! முதல் சர்வீஸ் 1,000 கிலோ மீட்டரிலும், அதன் பின்னர் ஒவ்வொரு 10 ஆயிரம் கிலோ மீட்டரின் போதும் சர்வீஸ் செய்தாலே போதுமானது; ஒவ்வொரு சர்வீஸுக்கு தோராயமாக 3,000-4,000 ரூபாய் வரை செலவாகும் என நம்பலாம். ஏற்கெனவே 1,000 பைக்குகள் புக்கிங் ஆகிவிட்ட நிலையில் (புக்கிங் தொகை – 50 ஆயிரம் ரூபாய்), G310R மற்றும் G310GS பைக்குகளின் வெயிட்டிங் பீரியட், 2 முதல் 4 மாதங்கள் இருக்கும் எனத் தெரிகிறது.

Leave a comment

Your email address will not be published.