இந்திரா காந்தி மிக உயர்ந்த தலைவர், பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகாரி என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
“ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லரை போன்றவர் இந்திரா காந்தி” என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதில் அளித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா ட்விட்டரில் நேற்று கூறியிருப்பதாவது:

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மிக உயர்ந்த தலைவர். நெருக்கடி நிலை குறித்து அவரே வருத்தம் தெரிவித்துள்ளார். சர்வாதிகாரிகள் தேர்தல் நடத்துவது இல்லை. இந்திரா காந்தி நெருக்கடி நிலையை வாபஸ் பெற்று நேர்மையான முறையில் தேர்தல் நடத்தினார். இதில் தோல்வியைத் தழுவினாலும் மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டார்.
ஆர்எஸ்எஸ்-பாஜக பள்ளியில் படித்த அருண் ஜேட்லி, சர்வாதிகாரி ஹிட்லரையும் அவரது கொள்கைகளையும் போற்றுபவர். இது எல்லோருக்கும் தெரியும். கடந்த 1980-ல் மக்கள் மீண்டும் இந்திரா காந்திக்கு பெரும்பான்மை ஆதரவை அளித்தனர். மக்கள் மனதில் இன்றளவும் இந்திரா காந்தி ஹீரோவாக நினைவுகூரப்படுகிறார். பிரதமர் நரேந்திர மோடி தற்போது சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். அவரது ஆட்சியில் ஜனநாயகம் கேள்விக் குறியாகி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறியபோது, முகலாய மன்னர் அவுரங்கசீப்பைவிட மோசமான சர்வாதிகாரியாக மோடி ஆட்சி நடத்துகிறார். அவரது ஆட்சியில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகிறது என்று தெரிவித்தார்.