பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதிக்கு முன்னேறினார் நடால் பெண்கள் பிரிவில் ஹாலெப் அசத்தல்

பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபெல் நடால், டெல்போட்ரோ அரைஇறுதிக்கு முன்னேறினர்.

பாரீஸ்,

பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபெல் நடால், டெல்போட்ரோ அரைஇறுதிக்கு முன்னேறினர். பெண்கள் பிரிவில் ருமேனியா வீராங்கனை ஹாலெப், முன்னாள் சாம்பியன் முகுருஜாவை தோற்கடித்து இறுதிசுற்றை எட்டினார்.

நடால் வெற்றி‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

இதில் முந்தைய நாள் மழையால் பாதியில் நிறுத்தப்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி மோதல்கள் நேற்று தொடர்ந்து நடந்தன. ஒரு ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 10 முறை சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்), டியாகோ ஸ்வார்ட்ஸ்மானை (அர்ஜென்டினா) எதிர்கொண்டார். முதல் செட்டை பறிகொடுத்த நடால் அதன் பிறகு சரிவில் இருந்து மீண்டு 4–6, 6–3, 6–2, 6–2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தார். தொடக்கத்தில் மிரட்டிய ஸ்வார்ட்ஸ்மான் மழை குறுக்கிட்ட பிறகு உத்வேகத்தை இழந்து, நடாலின் எழுச்சிக்கு அடங்கிப்போனார்.

மற்றொரு ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ 7–6 (5), 5–7, 6–3, 7–5 என்ற செட் கணக்கில் மரின் சிலிச்சை (குரோஷியா) வெளியேற்றி அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றிகாக டெல்போட்ரோ 3 மணி 50 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது. இந்த வெற்றியின் மூலம் அவர் தரவரிசையில் 6–வது இடத்தில் இருந்து 4–வது இடத்துக்கு முன்னேறுகிறார்.

9 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக பிரெஞ்ச் ஓபனில் அரைஇறுதியை எட்டியுள்ள டெல் போட்ரோ அடுத்து ரபெல் நடாலுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறார். மற்றொரு அரைஇறுதியில் டொமினிக் திம் (ஆஸ்திரியா)– மார்கோ செச்சினட்டோ (இத்தாலி) மோதுகிறார்கள்.

ஹாலெப் கலக்கல்பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் சிமோனா ஹாலெப்பும் (ருமேனியா), 3–ம் நிலை வீராங்கனையும், 2016–ம் ஆண்டு சாம்பியனுமான கார்பின் முகுருஜாவும் (ஸ்பெயின்) கோதாவில் இறங்கினர். ‘களிமண் தரை’யில் ஆடுவதில் வல்லவரான ஹாலெப் ஆக்ரோ‌ஷமாக ஆடி, எதிராளியை மிரள வைத்தார். முதல் செட்டை எளிதில் தனதாக்கிய ஹாலெப் 2–வது செட்டில் ஒரு கட்டத்தில் 2–4 என்ற கணக்கில் பின்தங்கினார். ஆனாலும் விடாமல் மல்லுகட்டி இந்த செட்டையும் சொந்தமாக்கினார். 1 மணி 32 நிமிடங்கள் நடந்த இந்த மோதலில் ஹாலெப் 6–1, 6–4 என்ற நேர் செட்டில் முகுருஜாவை சாய்த்து 3–வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஹாலெப் ஏற்கனவே 2014, 2017–ம் ஆண்டுகளில் இறுதிப்போட்டி வரை வந்து தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் ஹாலெப், தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்கவைத்துக் கொண்டார். தனது முதல் கிராண்ட்ஸ்லாம் மகுடத்துக்கு குறி வைத்துள்ள ஹாலெப் இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் அல்லது ஸ்லோனே ஸ்டீபன்ஸ் ஆகியோரில் ஒருவரை நாளை சந்திப்பார்.

Leave a comment

Your email address will not be published.