பெண்கள் கடைபிடிக்க வேண்டிய ரிஷி பஞ்சமி விரதம்

ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த ரிஷி பஞ்சமி விரதத்தை கணவனுடனோ அல்லது தனியாகவோ அனுஷ்டிக்க வேண்டும்.

விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் வரும் பஞ்சமி திதியை ‘ரிஷி பஞ்சமி’ என்று அழைக்கிறார்கள். அன்றைய தினம் சப்த ரிஷிகளை வணங்கி வழிபாடு செய்பவர்களின் இல்லங்களில் வளம் பெருகும் என்பது ஐதீகம். இந்த விரதத்தின் மூலம் வேண்டிய வரங்களைப் பெற முடியும். பெண்களின் சவுபாக்கியம் அதிகரிக்க வேண்டிச் செய்யப்படும் விரதம் இதுவாகும்.

அதுவும் வயது முதிர்ந்த பெண்களே இந்த விரதத்தை செய்வது வழக்கமாகும். ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த ரிஷி பஞ்சமி விரதத்தை கணவனுடனோ அல்லது தனியாகவோ செய்ய வேண்டும். அன்றைய தினம் காலை நீர்நிலைகளில், நெல்லிப்பொடியை உடலில் தேய்த்து குளிக்க வேண்டும்.

பிறகு வீட்டின் நடுவில் மண்டபம் அமைத்து அதில் கலசங்கள் வைத்து, அந்த கலசங்களில் சப்த ரிஷிகளையும், அருந்ததியையும் சேர்த்து ஆவாஹனம் செய்து பூஜிக்க வேண்டும். சப்த ரிஷிகளுக்கு நைவேத்தியம் செய்ததை, 7 பேருக்கு தானமாக வழங்க வேண்டும். இரவு முழுவதும் சப்த ரிஷிகளின் கதைகளைக் கேட்டபடி கண் விழித்து இருக்க வேண்டும்.

மறுநாள் காலையில் ரிஷிகளுக்கு ஹோமம் செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இதே போல் ஏழு ஆண்டுகள் செய்து வந்தால், துன்பங்கள் விலகும். மங்கலம் உண்டாகும். செல்வங்கள் சேரும். சவுபாக்கியம் கிடைக்கும்.

இந்த விரதங்களின் போது 10 விதமான தானங்களைச் செய்வது நன்மைகளை வழங்கும். இந்த தானங்கள் செய்யப்படுவது, நம்முடைய வாழ்விலும், விரதங்களைக் மேற்கொள்ளும் போதும், அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு வேண்டியே ஆகும்.

கோ-தானம் (பசு அல்லது தேங்காய்), பூதானம் (நிலம் அல்லது சந்தனக்கட்டை), தில தானம் (எள்), ஹிரண்யம் (பொன்னாலான நாணயம்), வெள்ளி நாணயம், நெய், வஸ்திரம், நெல், வெல்லம், உப்பு ஆகியன. ஒவ்வொன்றையும் ஒரு பாத்திரம் அல்லது தட்டில் வைத்துத் தானம் செய்யலாம். தச தானம் செய்ய இயலாதவர்கள், பஞ்ச தானம் செய்யலாம். அவை, வஸ்திரம், தீபம், கும்பம், மணி, புத்தகம் ஆகியன.

Leave a comment

Your email address will not be published.