புதுடில்லி : பஞ்சாப் மாநிலத்தில், பொற்கோவிலில் நடந்த ராணுவ நடவடிக்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 50 சதவீத இழப்பீடு தொகை வழங்க, மத்திய அரசு சம்மதம் தெரிவித்து உள்ளது.
கடந்த, 1984ல், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள, சீக்கிய பொற்கோவிலில், ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக, 40 சீக்கியர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லாததால், வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, ‘பாதிக்கப்பட்ட, 40 பேருக்கும், மத்திய – மாநில அரசுகள் இணைந்து, தலா, நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்’ என, அமிர்தசரஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும், மாநில அரசு, தன் பங்கு இழப்பீட்டை வழங்கிவிட்டது. மத்திய அரசு, தன் பங்கு இழப்பீட்டை வழங்கக் கோரி, பஞ்சாப் அரசும், எதிர்க்கட்சியான சிரோன்மணி அகாலிதளமும் வலியுறுத்தி வந்தன.
இதற்கிடையே, ‘மத்திய அரசு, இழப்பீடு வழங்க மறுத்தால், மாநில அரசே முழு இழப்பீட்டையும் வழங்கும்’ என, பஞ்சாப் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, அமரீந்தர் சிங் அறிவித்தார். இதையடுத்து, மத்திய அரசு, தன் பங்கான, 2.16 கோடி ரூபாய் இழப்பீடு தொகையை வழங்க, ஒப்புதல் வழங்கியுள்ளதாக, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், சத்யபால் ஜெயின், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.