ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களை உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைத்து, அவர்களின் கோரிக்கைகளுக்கு சுமூகத்தீர்வு ஏற்படுத்தி கொடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற பலகட்டங்களில், பலமுறை வலியுறுத்தியும் இன்னும் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பது வேதனைக்குரியது. இந்நிலையில் போக்குவரத்து துறையில் ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் ஓய்வூதிய நிலுவை, அகவிலைப்படி நிலுவை உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்கக்கோரி கடந்த 2 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் கிடைத்தால் தான் அவர்கள் ஓய்வு காலத்தில் ஓரளவிற்கு நிம்மதியாக வாழ முடியும். ஓய்வு பெற்ற பிறகு கிடைக்கின்ற பணத்தை வைத்துத்தான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய சூழலும் உள்ளது. மேலும் இன்றையப் பொருளாதாரப் பிரச்சினையில் தனது வாழ்வாதாரத்திற்கும், தனது குடும்ப வாழ்வாதாரத்திற்கும் அவர்களுக்கு அரசால் கிடைக்க வேண்டிய சலுகைகள், உதவிகள் உள்ளிட்ட அனைத்தும் தொடர்ந்து கிடைக்க வேண்டும்.
ஆனால், ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்களை எதிர்பார்த்து தொடர்ந்து காத்திருந்து இன்னும் கிடைக்காமல் இருப்பதால் தான் அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் தமிழக அரசு தான்.
எனவே ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக, சுமூகத்தீர்வு காண்பதற்காக ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் தமிழக அரசு நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேச்சுவார்த்தையின் போது ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக உறுதியான அறிவிப்பை தெரிவிக்க வேண்டும். அதன் மூலம் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்.
இதன் தொடர்ச்சியாக தமிழக அரசு ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும்” என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.