போராளி என்ற வார்த்தை கலைஞர் கருணாநிதியையே சாரும் என்று விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் உடல்நிலையில் தற்காலிகமாக திடீர் பின்னடைவு ஏற்பட்டது. அதன்பின் மருத்துவர்கள் தீவிர சிகிச்சைக்குப்பின் சீராகி வருகிறது. மருத்துவக்குழுக்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஆனால், காவேரி மருத்துவமனையின் முன் திமுக தொண்டர்கள் ஏராளமானோர் குழுமி இருக்கிறார்கள். இவர்களை கலைந்து செல்லக் கோரி போலீஸார் கூறியும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்துவருகின்றனர்.
இது தொடர்பாக விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
இப்போதிலிருந்து போராளி என்ற வார்த்தை கலைஞர் கருணாநிதியையே சாரும். இரவில் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதில் இருந்து இந்த நாள்வரை அந்த வார்த்தையை சொல்கிறார். ஒருபோதும் அவர் நம்பிக்கையை இழக்காமல் வாழ்ந்து வருகிறார். என்ன உத்வேகமான மனிதர். வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் வித்தியாசமான கோணத்தில் நீங்கள் எனக்கு வழங்கினீர்கள். அன்புள்ள தலைவரே, நான் உங்களுக்கு தலைவணங்குகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.