போலந்துடன் இன்று மோதல்; நாக் அவுட் சுற்றில் நுழையுமா ஜப்பான்…?

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டித் தொடரின் முக்கிய லீக் ஆட்டத்தில் இன்று ஜப்பான், போலந்து அணிகள் மோதவுள்ளன.

ரஷ்யாவின் வோல்கோகிராட் அரேனா மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. ஹெச் பிரிவில் செனகல், ஜப்பான், கொலம்பியா, போலந்து அணிகள் இடம்பெற்றுள்ளன. போலந்து அணி ஏற்கெனவே 2 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறி விட்டது.

ஜப்பான் 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு டிராவைப் பெற்று 4 புள்ளிகளுடன் உள்ளது. செனகல் அணி 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு டிராவைப் பெற்று 4 புள்ளிகளுடன் உள்ளது. ஆனால் கொலம்பியா அணியோ இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடி ஒரே ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது. ஒரு போட்டியில் தோல்வி கண்டு அந்த அணி 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

போலந்து அணி ஏற்கெனவே நாக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்டதால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் அந்த அணிக்கு பயன் இல்லை. அதே நேரத்தில் ஜப்பான் அணி டிரா செய்தாலே நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிவிடும்.

செனகல் – கொலம்பியா

மற்றொரு லீக் ஆட்டத்தில் செனகல், கொலம்பியா அணிகள் மோதவுள்ளன. சமாரா நகரில் இந்த ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் செனகல் அணி டிரா செய்தாலே அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிவிடும். இதுகுறித்து செனகல் அணியின் பயிற்சியாளர் அலியோ சிஸ்ஸே கூறும்போது, “எங்கள் அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக சாடியோ மானே உள்ளார். அவர் மீது எங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த ஆட்டத்தில் அவர் எங்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவார் ” என்றார்.

அதே நேரத்தில் கொலம்பியா அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. செனகல் அணி தோல்வி கண்டு, மற்றொரு லீக் ஆட்டத்தில் ஜப்பானும் தோல்வி கண்டால் செனகல், ஜப்பான் ஆகிய இரண்டுமே 4 புள்ளிகளுடன் இருக்கும். அப்போது கோல் வித்தியாச அடிப்படையில் எந்த அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும் என்பது தீர்மானிக்கப்படும்.

Leave a comment

Your email address will not be published.