மகாத்மா காந்தியின் பேரனான கோபாலகிருஷ்ண காந்தி, ராஜீவ்காந்தி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு ரூ.10 லட்சம் பரிசும் வழங்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பெயரில் 1995-ம் ஆண்டு முதல் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. சமூக நல்லிணக்கம், அமைதி, வன்முறைக்கு எதிராக போராடுதல் ஆகியவற்றில் சிறப்பாக சேவையாற்றுவோருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

2018-ம் ஆண்டுக்கான இவ்விருதுக்கு மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்காள மாநில முன்னாள் கவர்னருமான 73 வயது கோபாலகிருஷ்ண காந்தி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு விருதுடன் பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.10 லட்சம் பரிசு ஆகியவையும் வழங்கப்படுகிறது.
இவ்விருதை பெறும் 24-வது பிரமுகரான இவர், கடந்த ஆண்டு நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பாக போட்டியிட்டவரும் ஆவார்.
டெல்லியில் உள்ள ஜவகர் பவனில் வருகிற 20-ந்தேதி நடைபெறும் சிறப்பு விழாவில் கோபாலகிருஷ்ணா காந்தி விருதை பெற்றுக் கொள்வார்.
மேற்கண்ட தகவலை விருதுக் கான ஆலோசனை குழுவின் செயலாளர் தெரிவித்தார்.
சமூக நல்லிணக்கத்துக்கான ராஜீவ்காந்தி விருதை அன்னை தெரசா, உஸ்தாத் பிஸ்மில்லா கான், சுனில் தத், லதா மங்கேஷ்கர், கே.ஆர்.நாராயணன், சுவாமி அக்னிவேஷ் உள்ளிட்டோர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.