மரண தண்டனை விதிப்பது பாலியல் குற்றங்களை தடுக்குமா?

மரண தண்டனை விதிப்பது பாலியல் குற்றங்களை தடுக்குமா?

நாட்டையே உலுக்கும் பாலியல் வன்புணர்வு சம்பவங்களை தொடர்ந்து, 12வயதிற்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரணதண்டனையை விதிக்கும் வகையிலான சட்டத் திருத்தம் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரான மேனகா காந்தி, இந்த சட்டம் குழந்தைகளுக்கெதிரான வன்முறைகளை தடுக்கும் என்று நம்புவதாக கூறினார்.

கடந்த 2013ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் ஜோதி என்ற இளம்பெண் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதைத் தொடர்ந்து, பெண்களை பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் முடிவை மத்திய அரசு கொண்டுவந்தது.

தென் கிழக்கு ஆசியாவில் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை தொடர்ந்து நான்காவது நாடாக இந்தியாவில் பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், இந்த நடவடிக்கை பாலியல் வன்புணர்வு சம்பவங்களை குறைக்குமா, குறைக்காதா என்ற வேறுபட்ட கருத்து எழுந்துள்ளது.இந்நிலையில், பாலியல் வன்புணர்வுக்கு மரண தண்டனையை அறிமுகப்படுத்தியுள்ள மற்ற மூன்று தென் கிழக்கு ஆசிய நாடுகளின் சட்டம் குறித்து பிபிசி ஆய்வு செய்தது.

ஆப்கானிஸ்தான்

பெண்களை பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்கு எதிராக கடந்த 2009ஆம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானில் ஒரு குற்றவியல் சட்டம் கூட நிறைவேற்றப்படவில்லை.

2009ஆம் ஆண்டு பெண்களுக்கெதிரான வன்முறை தடுப்பு சட்டம் அதிபரின் ஆணையின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

அதாவது, பெண்கள் அல்லது சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி இறந்தால், அந்த செயலை புரிந்தவருக்கு மரண தண்டனை விதிப்பதற்கு அந்த சட்டம் வழிகோலியது.

மரண தண்டனை விதிப்பது பாலியல் குற்றங்களை தடுக்குமா?படத்தின் 

மரண தண்டனையால் பாலியல் வன்புணர்வுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதா?

பாலியல் வன்புணர்வு சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும்கூட ஆப்கானிஸ்தானில் பாலியல் வன்புணர்வு சம்பவங்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்தது.

ஆப்கானிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்படுவது பரவலாக இல்லை.

அவ்வப்போது தனது விதிகளின்படி தவறு செய்தவர்களை பொதுவெளியில் தூக்கிலிட்ட தாலிபன் அமைப்பு, ஆப்கானிஸ்தானில் கடந்த 2001ஆம் ஆண்டு வீழ்ந்த பிறகு, அந்நாட்டு அரசாங்கம் ஒருசில வருடங்களுக்கு ஒருமுறையே தூக்குத்தண்டனை நிறைவேற்றி வருகிறது.

மரண தண்டனையால் பாலியல் வன்புணர்வுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதா?

ஆனால், ஒவ்வொரு தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவதற்கும் அந்நாட்டின் அதிபர் தனித்தனியே கையெழுத்திட வேண்டும்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இதுவரை 36 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அவற்றுள் எத்தனை பாலியல் வன்புணர்வு செய்தவர்களுக்கு வழங்கப்பட்டது என்பது தெரியவில்லை.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2014ஆம் ஆண்டு சில பெண்களை கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்த ஐந்து ஆண்களுக்கு அப்போதைய அதிபர் கர்சாய், இரண்டு மணிநேர துரித விசாரணைக்கு பிறகு, மரண தண்டனை விதிப்பதற்கு ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட்டார்.

பாகிஸ்தான்

பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்கு தெற்கு ஆசியாவிலேயே மரண தண்டனை விதித்த முதல் நாடு பாகிஸ்தான். 1979ஆம் ஆண்டு அப்போதைய ராணுவத்தின் தளபதியாகவும், நாட்டின் ஆறாவது அதிபராகவும் விளங்கிய ஜியா உல் ஹக், முறை தவறிய பாலியல் உறவு கொள்பவர்கள் மற்றும் பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்கு கல்லை கொண்டு அடித்தே கொல்லும் மரண தண்டனையை கொண்டுவந்தார்.

மரண தண்டனை விதிப்பது பாலியல் குற்றங்களை தடுக்குமா?படத்தின் 

ஆனால், பாலியல் வன்புணர்வுகளால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்கள் பாதிக்கப்பட்டதுக்கு சாட்சியாக நான்கு ஆண்களை நிறுத்தவேண்டும் என்ற விதி இருந்ததால், இந்த சட்டம் அடக்குமுறையாக பார்க்கப்பட்டது.

2006ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் அந்த சட்டம் திருத்தியமைக்கப்பட்டது.

இந்த சட்டத் திருத்தத்தின்படி, விபசாரம் தனிப்பட்ட குற்றமாக வகைப்படுத்தப்பட்டதுடன், பெண்கள், சிறுமிகள், கூட்டு பாலியல் வன்புணர்வு மற்றும் 16 வயதிற்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம், பாகிஸ்தான் தண்டனை சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

மரண தண்டனையால் பாலியல் வன்புணர்வுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதா?

12 வருடங்களுக்கு முன்னர் பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதிலிருந்து இதுவரை பார்க்கும்போது பாகிஸ்தானில் பாலியல் வன்புணர்வு சம்பவங்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளது.

மரண தண்டனையால் பாலியல் வன்புணர்வுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதா?

மரண தண்டனைக்கெதிரான எழுந்த சர்வதேச அழுத்தங்களால் கடந்த 2008-2014ஆம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் பாகிஸ்தானில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பாலியல் வன்புணர்வு சம்பவங்களில் ஈடுபட்டதற்காக 25 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் மனித உரிமை ஆணையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“பயங்கரவாத சம்பவங்களுக்கு இணையாக பாலியல் வன்புணர்வு குற்றங்கள் நடத்தப்பட்டாலும், எதுவுமே மாறவில்லை. பாலியல் வன்புணர்வு மற்றும் கூட்டு வன்புணர்வு சம்பவங்களின் எண்ணிக்கை பாகிஸ்தானில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தண்டனை விகிதங்கள் மிகவும் குறைந்து வருகிறது” என்று லாகூரை சேர்ந்த வழக்கறிஞரான சைனப் மாலிக் கூறுகிறார்.

வங்கதேசம்

பாலியல் வன்புணர்வு, கூட்டு பாலியல் வன்புணர்வு, அமில தாக்குதல்கள் மற்றும் குழந்தை கடத்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனைகள் வழங்கவேண்டும் என்பதற்காக 1995 ஆம் ஆண்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான ஒடுக்குமுறை (சிறப்பு விதிகள்) சட்டத்தை வங்கதேச நாடாளுமன்றம் கொண்டுவந்தது.ஆனால் இந்த தீவிர தண்டனைகள் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன. போதிய ஆதாரங்கள் மற்றும் குறைந்தபட்ச தண்டனைகூட இல்லாத காரணத்தால் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலரும் சுதந்திரமாகத் திரிந்தனர்.

2000 ஆம் ஆண்டில் இந்த சட்டம் அகற்றப்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் சட்டத்திற்கு எதிரான ஒடுக்குமுறை தடுப்பு சட்டத்தின் கீழ் மாற்றப்பட்டது; இதில் பெண்கள் அல்லது குழந்தைகள் வன்புணர்வு வழக்கில் மரண தண்டனை வழங்கும் அம்சம் மட்டும் மாற்றப்படவில்லை. ஆயுள் தண்டனை மற்றும் பிற குற்றங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் இச்சட்டத்துடன் இணைக்கப்பட்டது.

மரண தண்டனையால் பாலியல் வன்புணர்வுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதா?

24 ஆண்டுகளுக்கு முன்னர் மரண தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து வங்கதேசத்தில் பதிவான வன்புணர்வு வழக்குகளின் எண்ணிக்கை குறையவில்லை.

மரண தண்டனையால் பாலியல் வன்புணர்வுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதா?

”வன்புணர்வு செய்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என்ற பயத்தை மக்கள் மனதில் கொண்டுவர எந்த சான்றும் இல்லை; வன்புணர்வு வழக்குகளின் எண்ணிக்கையும் குறையவில்லை, அவற்றின் தீர்ப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கவில்லை. ஏனென்றால் குற்றங்களுக்கு எதிரான ஆதாரங்கள் ஒழுங்காக சேகரிக்கப்படுவதிவில்லை. சாட்சி அளிப்பவர்களுக்கும் புகார் அளிப்பவர்களுக்கும் போதிய பாதுகாப்பில்லை” என்கிறார் மனித உரிமை ஆர்வலரான சுல்தானா கமல்.

கடந்த பத்து ஆண்டுகளில் வங்கதேசத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மரண தண்டனை மீதான உலகளாவிய தரவுகளை சேகரித்துவரும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறுகிறது.

ஆனால், இவற்றில் வன்புணர்வு வழக்கில் எத்தனை மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன என்பது பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

வங்கதேச உச்சநீதிமன்றம் 2015 ஆம் ஆண்டில் வன்புணர்வு வழக்குகளுக்கு ‘கட்டாய’ மரண தண்டனை வழங்குவது அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும் தண்டனையின் அளவு கவனமாக தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டதிலிருந்து மரண தண்டனைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்தியாவிற்கான படிப்பினை

1.குறைவான பதிவு

தெற்காசிய நாடுகளில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டவர்கள் சமூக களங்கமாக கருதப்படுவதால், பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய பாதிப்பை பெரும்பாலும் வெளிப்படையாக சொல்வதில்லை.

தன்னால் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணை திருமணம் செய்வதற்கு ஆண்கள் ஒப்புக்கொள்வது அரிது என்று கூறுகிறது பாலியல் வல்லுறவு தொடர்பான தரவுகளை வெளியிடும் ஆப்கானிஸ்தான் தனிநபர் மனித உரிமைகள் ஆணையம் (Afghanistan independent Human Rights Commission). ஆனால் வன்புணர்வு செய்யப்பட்ட பெண் கர்ப்பமானால், அவரை திருமணம் செய்ய வேண்டும் என அதற்கு காரணமான ஆண் கட்டாயப்படுத்தப்படுவார்.

கட்டாயத் திருமணமும், குறிப்பிட்ட வயதுக்கு முன் திருமணம் செய்வதும் இந்தியாவைப் போலவே ஆப்கானிஸ்தானிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற அமைப்பு 2012ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி, பாலியல் வன்புணர்வு பற்றி பெண்கள் புகாரளித்தால், அவர்கள் தகாத உறவு என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்படலாம் அல்லது கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படலாம்.

மரண தண்டனை விதிப்பது பாலியல் குற்றங்களை தடுக்குமா?படத்தின் 

இதைத்தவிர, தவறு செய்தவர்கள் வீட்டை விட்டு ஓடிப்போனதான குற்றச்சாட்டில் கைது செய்யப்படுகின்றனர். இது ஆஃப்கன் குற்றவியல் சட்டத்தின்படி குற்றம் இல்லை என்பதும் குறிப்பிட்த்தக்கது.

“பாதிக்கப்பட்டவர்களுக்கு போலீஸ், நீதி அமைப்புகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆதரவு கொடுப்பதற்கு பதிலாக, தவறாக நடத்தப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் பெரும்பாலும் அக்கறையில்லாமல் ஏளனத்துடன் நடத்தப்படுவதுடன், தார்மீக நெறிமுறைகளை மீறியதாக தண்டிக்கப்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக போலீஸ் மற்றும் பிற அதிகாரிகளின் பொறுப்புகளை அதிகரிக்கும் வகையில் இந்தியாவில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆனால் மாற்றம் என்பது மிகவும் மெதுவாகவே உள்ளது. இந்தியாவில் வன்புணர்வு சம்பவங்களுக்கும் போலீசிடம் புகார் அளிப்பதற்குமான இடைவெளி மிகவும் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.மரண தண்டனை மட்டுமே வன்புணர்வு குற்றங்களை குறைப்பதற்கு உதவாது என்று ஆப்கானிஸ்தான் தனிநபர் மனித உரிமைகள் ஆணையத்தின் நிர்வாக இயக்குநர்

மூஸா மஹ்மூடி கூறுகிறார்.

2. தண்டனை விகிதம் குறைவு

பாலியல் வன்புணர்வு குற்றத்திற்கான தண்டனை விகிதம் கடந்த ஐந்து ஆண்டுகளாக பூஜ்யம் என்ற அளவில் இருப்பதாக, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சைதா சுகாரா இமாம் 2014ஆம் ஆண்டு குற்றம் சாட்டினார்.

கடுமையான தண்டனையே, தண்டனை விகிதம் குறைவாக இருப்பதற்கு முக்கியமான காரணமாகும். பல சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்தியோ, கட்டாயப்படுத்தியோ போலீசார் சமரச முயற்சிகளில் ஈடுபட்டு, புகாரை திரும்பப் பெற்று கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றனர்.

இதனால் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் குற்றம் செய்ததற்கான சாத்தியங்கள் குறைவாக இருப்பதான சந்தேகத்தில் விடுவிக்கப்படுகின்றனர்.

பாலியல் வன்புணர்வு என்பது சமரசம் செய்துக் கொள்ள முடியாத குற்றம் என்றாலும், நடைமுறையில் சமரசங்கள் சாத்தியமாகின்றன. பாலியல் வன்புணர்வுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு எதிரான பல இந்திய செயற்பாட்டாளர்கள் இந்த கவலையை எழுப்புகின்றனர்.

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்ட போதிலும், பெண்கள் மற்றும் சிறார்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்களின் எண்ணிக்கை மாறாமல் தொடர்கிறது.

மரண தண்டனை விதிப்பது பாலியல் குற்றங்களை தடுக்குமா?படத்தின் 

“பெண்களுக்கு எதிராக போலீசார் பாகுபாடாக நடந்துக் கொள்கின்றனர். கூட்டு பாலியல் வன்புணர்வு விவகாரத்தில் கூட குழுவை சேர்ந்த பல ஆண்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்பதால் வழக்கு பதிவு செய்யப்படுவதில்லை. ஒரேயொரு நபருக்கு எதிராகவே வழக்கு பதிவு செய்யப்படுகிறது” என்று பாகிஸ்தான் நீதித்திட்டத்தின் மாலிக் கூறுகிறார்.

தண்டனை வழங்கப்படும் விகிதம் குறைவாக இருப்பதால், ஏற்கனவே இருக்கும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரி அல்லது அரசு அதிகாரி ஒருவர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால், அது குறித்து உரிய விசாரணை செய்வது, இரு தரப்பினருக்கும் மரபணு பரிசோதனைகளை முறையாக மேற்கொள்வது, பாதிக்கப்ப்ட்டவரின் அடையாளத்தை மறைப்பது, விசாரணையை விரைவில் முடிப்பது போன்ற சாத்தியங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால் இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் அனுபவங்களின் அடிப்படையில் இந்த சட்டங்கள் உறுதியாக, நன்கு திட்டமிடப்பட்டு செவ்வனே செயல்படுத்தப்படுமா என்பது கவலைக்குரிய விஷயமாகவே உள்ளது.

3. நீதியின் மெத்தனப்போக்கு

வழக்கை நடத்தும்போது ஏற்படும் அதிக செலவுகள், தாமதமான விசாரணை நடைமுறைகள் என நீளும் சிக்கல்களைத் தவிர, பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் இரண்டு விரல்களை உட்செலுத்தி பரிசோதனை செய்வது போன்ற உடல்ரீதியான சோதனைகளை நினைத்து அச்சப்பட்டு, நீதிமன்றத்திற்கு வெளியே வழக்குகள் சமரசம் செய்துக்கொள்ளப்படுவதாக வங்க தேசத்தில் உள்ள செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் இரு விரல் பரிசோதனை தடை செய்யப்பட்டிருந்தாலும், சங்கடம் தரும் உடல் பரிசோதனைகள் செய்யப்படுவது இயல்பானதாக இருக்கிறது. நீண்ட இழுபறியான விசாரணைகளும் குற்றங்களை பதிவு செய்வதில் தடைக்கல்லாக இருக்கிறது.

மரண தண்டனை விதிப்பது பாலியல் குற்றங்களை தடுக்குமா?படத்தின் 

பாலியல் வன்கொடுமை வழக்குகளை வங்கதேச பாரம்பரிய நீதிமன்றங்கள் (கிராம பஞ்சாயத்துகள்) விசாரிக்கக்கூடாது அதற்கு அவற்றிற்கு அதிகாரம் இல்லை என்று தெளிவாக வரம்பு வரையறுக்கப்பட்டிருந்தாலும், அவை பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தீர்ப்பளிக்கின்றன.

இந்த ‘ஷாலிஷ்’ கிராம நீதிமன்றங்கள் பெரும்பாலும் பழமைவாத கண்ணோட்டத்துடன் ஆண்களை அணுகுகுகின்றன.பாலியல் வன்கொடுமை வழக்குகளின் தரவுகளை இணைக்கும் அமைப்பான ஒடிர்கர் அறக்கட்டளையின் செயலாளர் அடிலுர் ரெஹ்மான் இவ்வாறு கூறுகிறார்,

“ஊழல் பரவலாக இருப்பதால் மரண தண்டனை விதிப்பதில் தடையில்லை, அரசியல் செல்வாக்கு கொண்ட குற்றவாளிகளால் நீதி அமைப்ப்பு எளிதாக கையாளப்படுகிறது, அவர்களுக்கு பிணை விடுதலை கிடைக்கிறது, கருணையுடன் பார்க்கப்படுகிறார்கள். அவர்களை யாரும் தண்டிக்க விரும்புவதில்லை” என்று அவர் கூறுகிறார்.

மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள், பாதிக்கப்பட்டவர் நீதித்துறையை அணுகுவதற்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை தெளிவாகக் காட்டுகின்றன.

போலீஸ், நீதித்துறை, அரசு அதிகாரிகள் மற்றும் சமுதாய அணுகுமுறைகளில் மாற்றம் ஏற்பட்டாலன்றி, குற்றவியல் சட்டங்கள் உண்மையில் குற்றங்களின் எண்ணிக்கையை குறைப்பதில் மிகவும் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும்.

Leave a comment

Your email address will not be published.