
மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருப்பதைப் போல மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வில் தகுதிபெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் மஜக பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி கோரிக்கை விடுத்தார்.
சட்டப்பேரவையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மானியக்கோரிக்கை மீது நேற்று விவாதம் நடந்தது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் எம்,.தமீமுன் அன்சாரி கலந்துகொண்டு பேசியதாவது:
தமிழக விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்கும் வகையில் காவிரி டெல்டா பகுதியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். சென்னை அண்ணா சாலையில் உள்ள மதரசா மேல்நிலைப்பள்ளி வளாகம் ரூ.1,000 கோடிக்கு மேல் மதிப்பு உடையது. அங்கு மகளிர் பொறியியல் கல்லூரி தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது தொகுதியான நாகப்பட்டினத்தில் மறைமலையடிகள் தனித்தமிழ் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட வேண்டும். கவிஞர் இன்குலாப், நா.காமராசன் உள்ளிட்டோர் பெயரில் விருதுகள் வழங்க வேண்டும். பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டத்தை இயற்றுவதுடன் அவர்களுக்கு நலவாரியத்தையும் ஏற்படுத்த வேண்டும்.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு மேற்கொண்டு வரும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை நன்கு அறிவேன். மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்இடஒதுக்கீடு இருக்கிறது. இதுபோன்று உள் இடஒதுக்கீடு வழங்குவதில் தடை இல்லை என்றும், அதுதொடர்பாக மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார். எனவே, தமிழக அரசு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.