மறு ஆய்வு முடிந்ததையடுத்து ஜிசாட்- 11 செயற்கைக்கோளை விண்ணில் ஏவ இஸ்ரோ முடிவு

பெங்களூரு: ஜிசாட்- 11 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள இஸ்ரோ அதிகாரி ஒருவர், ஜிசாட்11 செயற்கைக்கோளை மறுஆய்வு செய்யும் பணி முழுமையாக முடிந்து விட்டதாகவும், இதனையடுத்து மேற்கண்ட செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அதிக எடை கொண்ட செயற்கை கோள்களை தென்அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவில் இருந்து இந்தியா ஏவி வருகிறது. 5700 கிலோ எடை கொண்ட ஜிசாட் 11 செயற்கை கோள் பிரெஞ்ச் கயானவில் இருந்து கடந்த மாதம் 26-ம் தேதி ஏவப்பட இருந்தது. இதனிடையே ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட ஜிசாட் 6 செயற்கைக்கோள் தோல்வியடைந்ததால், ஜிசாட் 11 மறுஆய்விற்காக இந்தியா கொண்டு வரப்பட்டது. மறு ஆய்வு முடிந்த நிலையில் ஜிசாட் 11 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவதற்கு தகுதியான நிலையில் இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இதனையடுத்து ஜிசாட் 11 செயற்கைக்கோளை மீண்டும் பிரெஞ்ச் கயானாவிற்கு திருப்பி அனுப்பும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. திட்டமிட்டப்படி ஜிசாட் 11 செயற்கைக்கோள் பிரெஞ்ச் கயானாவிற்கு சென்றடைந்தவுடன், கெளரூ ஏவுதளத்தில் இருந்து ஏரியன்ஸ்பேஸ் நிறுவனம் விரைவில் விண்ணில் செலுத்தும் என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published.