மிகச் சரியாக தவறு செய்வது எப்படி? பாடம் சொல்லும் கதை

நாம் இழந்த ஒரு பொருள் ஒருவருக்கு ஆபத்துக் காலத்தில் பயன்பட்டால் அப்போது கிடைக்கும் மனநிறைவு எல்லையில்லாதது.

மிகச் சரியாக தவறு செய்வது எப்படி? பாடம் சொல்லும் கதை #MotivationStory

`நீங்கள் செய்த கடைசி தவறுதான் உங்களுடைய மிகச் சிறந்த ஆசிரியர்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த சூழலியல், நுகர்வோர் உரிமைப் போராளியான ரால்ஃப் நாடெர் (Ralph Nader). தவறுகளிலிருந்துதான் நாம் பாடங்கள் கற்றுக்கொள்கிறோம்; நம்மைத் திருத்திக்கொள்கிறோம். தவறே செய்யாத ஒருவர் வாழ்க்கையில் எதையும் கற்றுக்கொள்ள முடியாது. சில நேரங்களில் நாம் செய்கிற ஒரு சிறு தவறோ, இழப்போ வேறு யாரோ ஒருவருக்கு நன்மையில் போய் முடியலாம். இந்த பாடத்தை உணர்த்தும் கதை இது…

அது அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை நிலவிக்கொண்டிருந்த காலம். அவர் ஒரு தச்சுத் தொழிலாளி. அன்றைக்கு அவருக்கு ஒரு தேவாலயத்தில் வேலை. அங்கிருந்து சில துணிமணிகளை சீனாவிலிருக்கும் சில அனாதை விடுதிகளுக்கும் சில சர்ச்சுகளுக்கும் அனுப்ப ஏற்பாடு நடந்துகொண்டிருந்தது. அதற்காக மரப்பெட்டிகள் செய்வதற்குத்தான் அந்தத் தச்சுத் தொழிலாளி அங்கே போயிருந்தார். வேலை முடிந்தது. வீட்டுக்குக் கிளம்பினார். வரும் வழியில், தன் மூக்குக் கண்ணாடியை எடுப்பதற்காகச் சட்டை பாக்கெட்டுக்குள் கைவிட்டுப் பார்த்தார். கண்ணாடி இல்லை. மற்றொரு பாக்கெட், பேன்ட் பாக்கெட்டுகள்… எங்கு தேடியும் இல்லை. இப்போது அவர் ஓரிடத்தில் நின்று கடைசியாக தான் என்னென்ன செய்தோம் என்று யோசித்துப் பார்த்தார். மரப்பெட்டிகளில் துணிகளைவைத்து ஆணியடித்து மூடியபோது அவருடைய கண்ணாடி, அவருக்கே தெரியாமல் ஏதோ ஒரு பெட்டியில் விழுந்திருக்க வேண்டும். அவருடைய விலையுயர்ந்த, நல்ல பிராண்ட் கண்ணாடி இப்போது சீனாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறது.

முதல் நாள்தான் அந்தக் கண்ணாடியை விலைக்கு வாங்கியிருந்தார். விலை 20 டாலர். அன்றைய தேதியில் மிகப் பெரிய தொகை. அந்தத் தச்சுத் தொழிலாளிக்கு ஆறு குழந்தைகள். அவர்களை வளர்க்கவே சிரமப்பட்டுக்கொண்டிருந்தார். இந்த நிலையில் வாங்கிய புத்தம் புதுக் கண்ணாடியும் பறிபோய்விட்டது. இப்போது இன்னொரு கண்ணாடியை வாங்க வேண்டும் என்கிற கவலை தொற்றிக்கொண்டது. நொந்து போனார் அவர். தனக்குத் தானே பேசிக்கொண்டு நடந்தார்… “இதெல்லாம் நல்லதுக்கு இல்லை கடவுளே. நான் உன்னை எவ்வளவு நம்புறேன். சர்ச் வேலைங்கிறதாலதானே கூலிகூட அதிகம் கேக்காம இன்னிக்குக் காலையிலேயே வேலைக்கு வந்தேன்? என்னோட கண்ணாடியைப் பறிகொடுக்கவெச்சுட்டியே இறைவா..!’

சில மாதங்கள் கழிந்தன. அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. சிகாகோவிலிருந்த சர்ச்சுக்குச் சொந்தமான மிஷனரியின் இயக்குநர் அன்றைக்கு அங்கே வருவதாக பேசிக்கொண்டார்கள். அவர் சீனாவிலிருந்தபோது, அமெரிக்காவிலிருந்து அவருக்கும் அனாதை இல்லங்களுக்கும் உதவிய ஒவ்வொரு தேவாலயத்துக்கும் போய் நன்றி சொல்லிக்கொண்டிருந்தார். அந்த ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைக்கு அந்த தச்சுத் தொழிலாளியும் போயிருந்தார்.

புத்தகம்

பிரார்த்தனை நேரத்துக்குப் பிறகு மிஷனரியின் சார்பாக, இயக்குநர் பேச எழுந்தார். ஒவ்வொருவருக்காக நன்றி சொல்லிக்கொண்டே வந்தார். கடைசியாக இப்படிச் சொன்னார்… “எல்லாத்துக்கும் மேல இங்கேயிருந்து நீங்க அனுப்பிவெச்சீங்க பாருங்க… அந்த மூக்குக் கண்ணாடி… அதுக்காக ஸ்பெஷலா நான் நன்றி சொல்லியே ஆகணும். சீனாவுல நான் இருந்தப்போ, ஒரு நாள் அனாதை விடுதிக்குள்ள நுழைஞ்ச சில சமூக விரோதிங்க எல்லாத்தையும் உடைச்சுப் போட்டுட்டு, சிலதை தூக்கிட்டுப் போயிட்டாங்க. அப்பிடி உடைஞ்சு போனதுல என் கண்ணாடியும் ஒண்ணு. சுக்கு நூறா உடைஞ்சு போயிடுச்சு. என்கிட்ட பணம் இருந்தாலும், கண்ணாடி வாங்க வழியில்லை. வெளியில வர்றதுக்கே பயமா இருந்த காலம் அது. யாராவது அடிப்பாங்களோ, திடீர்னு வந்து தாக்குவாங்களோனு ஒரு நடுக்கம் இருந்துக்கிட்டே இருந்த நேரம். கொஞ்சம் கொஞ்சமா என்னோட நம்பிக்கையெல்லாம் என்னைவிட்டுப் போய்க்கிட்டே இருந்துச்சு. அதே நேரத்துல மூக்குக் கண்ணாடி இல்லாம எனக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டுடுச்சு. ஒவ்வொரு நாள் பிரார்த்தனையிலயும் `கடவுளே… எனக்கு கண்ணாடி கிடைக்க வழி செய்ய மாட்டியா?’னு கேட்குறதே என் வழக்கமாகிடுச்சு.

அப்போதான் ஒரு நாள் இந்த சர்ச்சுலருந்து அனுப்பின மரப்பெட்டிகள் வந்து சேர்ந்துச்சு. எங்கள் பணியாட்கள் ஒவ்வொரு பெட்டியாத் திறந்தபோது, இரண்டு போர்வைகளுக்கு நடுவுல இந்த மூக்குக் கண்ணாடி இருந்தது’’ என்று சொன்ன இயக்குநர், தன் பாக்கெட்டிலிருந்து மூக்குக் கண்ணாடியை எடுத்துக் காட்டினார். பிறகு பேச்சைத் தொடர்ந்தார்… “இன்னொரு ஆச்சர்யம் என்னன்னா, இந்த கண்ணாடி எனக்காகவே செஞ்சது மாதிரி அத்தனை பொருத்தமா இருந்துச்சு. கண் நல்லா தெரிஞ்சுது. தலைவலி ஓடிப் போயிடுச்சு. இந்தக் கண்ணாடியை அனுப்பிவெச்சதுக்காக இந்த தேவாலயத்துக்கு இன்னொரு முறை என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிச்சுக்குறேன்…’’

தேவாலயத்தின் பாதிரியார் அவசரமாக அவர்கள் சீனாவுக்கு அனுப்பிய பட்டியலை எடுத்து சரி பார்த்தார். அதில் மூக்குக் கண்ணாடி என்கிற பெயர் எந்த இடத்திலும் இல்லை. இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அந்தத் தச்சுத் தொழிலாளி தலை குனிந்து அமர்ந்திருந்தார். அவர் கண்களில் நீர் திரண்டிருந்தது. உதடுகள், “நன்றி கடவுளே… நன்றி கடவுளே…’’ என முணுமுணுத்துக்கொண்டிருந்தன.

Leave a comment

Your email address will not be published.