மீண்டும் புதிய சர்ச்சை : 4 சீன செல்போன் நிறுவனங்களுடன் பேஸ்புக் பயனாளி தகவல்கள் பகிர்வு

வாஷிங்டன்: பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகம் எச்சரித்த 4 சீன செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன், பேஸ்புக்  தனது பயனாளிகளின் தகவல்களை பகிர்ந்து கொண்டதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கடந்த மாதம்  தனது ராணுவ வீரர்களுக்கு ஒரு எச்சரிக்கையை அனுப்பியது. அதில், ‘சீனாவின்  ஹவாய், இசட்டிஇ உள்ளிட்ட நிறுவனங்கள் தயாரிக்கும்  செல்போனில் பாதுகாப்பு அம்சங்கள் இல்லை. இதுபோன்ற நிறுவனங்களின் செல்போன்கள்,  அதன் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம், இவற்றில்  ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது’ என கூறியிருந்தது.

இந்நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக எச்சரிக்கப்பட்ட சீனாவை சேர்ந்த 4 செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேஸ்புக் நிறுவனம்,  தனது  பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. 2 நாட்களுக்கு முன் பேஸ்புக் குறித்து கட்டுரை  வெளியிட்ட பிரபல நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, உலகம் முழுவதும் 60 நிறுவனங்களுடன் தனது இணையதளத்தை பயன்படுத்துவோரின்  தகவல்களை பேஸ்புக் பகிர்ந்து கொண்டதாக குற்றம்சாட்டி இருந்தது. இதை பேஸ்புக் நிறுவனமும் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், நியூயார்க் டைம்ஸ்  வெளியிட்டுள்ள புதிய செய்தி பேஸ்புக்கை மேலும் ஒரு சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது.

நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள கட்டுரையில், ‘ஹவாய், லேனோவா, ஓப்போ மற்றும் டிசிஎல் ஆகிய 4 சீன நிறுவனங்களுடன் தகவல்களை  பகிர்ந்து கொள்ள பேஸ்புக் ஒப்பந்தம் செய்துள்ளது.  பிளாக்பெர்ரி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதை போலவே, பேஸ்புக் பயனாளிகள் தகவல்களை  பெறுவதற்கு  சீன செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் பயன்படுத்துவோர், அவர்களின் நண்பர்கள் குறித்த  தகவல்கள் மட்டுமின்றி அவர்களின் மதம், அரசியல், பணி மற்றும் கல்வி உள்ளிட்ட  தகவல்களை அணுகவும் இந்த சீன நிறுவனங்கள்  அனுமதிக்கப்பட்டு உள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது. ஹவாய் நிறுவனத்துடன் 2010ம் ஆண்டில் பேஸ்புக் செய்து கொண்டுள்ள தகவல் பகிர்வு  ஒப்பந்தம், இந்த வார இறுதியில் முடிகிறது.

Leave a comment

Your email address will not be published.