முதல் சம்பளத்தில் என்ன செய்ய வேண்டும்?

கஷ்டப்பட்டு படித்து, கேம்பஸில் தேர்வாகி நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்திருக்கும் சூழலில் கொண்டாடுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் முதல் சம்பளத்தை முழுவதும் கொண்டாட்டத்துக்கு செலவு செய்ய வேண்டாம். அதே போல தேவையில்லாத பொருட்களையும் வாங்கிக் குவிக்க வேண்டாம். நிதி நிலையிலும் கவனம் இருக்க வேண்டும். சம்பாதிக்க தொடங்கும்போது சேமிப்பையும் தொடங்குங்கள்.

சம்பளம் வாங்கத் தொடங்கிய முதல் சில மாதங்களில் அதிக செலவு செய்ய பழகினால் அதன் பிறகு மாத கடையில் பணப்புழக்க பிரச்சினை ஏற்படும். அதனால் உங்களது செலவுகளை பட்டியலிட்டு பழகுங்கள்.

அத்தியாவசிய செலவு, கல்விக்கடனுக்காக இஎம்ஐ, வாடகை, பெற்றோர்களுக்கு அனுப்ப வேண்டிய தொகை, போக்குவரத்து செலவு ஆகியவற்றை பட்டியலிடுங்கள். அதேபோல ஒரு மாதத்துக்கு எத்தனை முறை வெளியே சென்று சாப்பிடுகிறீர்கள் என்பதையும் நண்பர்களுடன் இணைந்து எத்தனை முறை திரைப்படம் உள்ளிட்ட பொழுதுபோக்குக்கிற்கு செலவு செய்கிறீர்கள் என்பதையும் கண்காணியுங்கள்.

முதல் சில மாதங்களில் உங்களது வரவு செலவினை அடிப்படையாக வைத்து நிதி சார்ந்த முடிவுகளை எடுங்கள். முதல் முறையாக சம்பளம் வாங்குபவர்கள் குறைந்த பட்சம் 5 முதல் 10 சதவீதம் வரை சேமிக்க வேண்டும்.

காப்பீடு

எந்த விதமான முதலீட்டினையும் செய்வதற்கு முன்பு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டியது அவசியமாகும். உங்களுடைய ஆண்டு சம்பளத்தில் குறைந்தபட்சம் 10 மடங்கு அளவுக்கு எடுக்க வேண்டியது அவசியமாகும். அதே போல சம்பளம் உயரும் போது பாலிசி தொகையை உயர்த்துவதும் அவசியம்.

அடுத்தது மருத்துவ காப்பீடு. உங்கள் நிறுவனத்தில் குரூப் பாலிசி இருக்கும் பட்சத்தில் அதில் இணைந்துவிடலாம். உங்களது பெற்றோர்களுக்கும் இணைய வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் அவர்களையும் இணைத்துவிடலாம். காரணம் இந்த பாலிசிகளில் பிரீமியம் செலுத்தியவுடனே கவரேஜ் கிடைக்கும். முடிந்தால் பிரத்யேகமாக வேறு பாலிசியை எடுத்துக்கொள்ளலாம். வேறு நிறுவனத்துக்கு நீங்கள் மாறினாலும் இந்த பாலிசி பயனுள்ளதாக இருக்கும். வேலைக்கு சேர்ந்த உடனே மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டினை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

முதலீடு

மாதாந்திர செலவுகள் மற்றும் காப்பீட்டுக்கான பிரீமியம் செலுத்தியது போக மீதத்தொகை இருக்கும்பட்சத்தில் முதலீடுகள் குறித்து யோசிக்கலாம்.  பொதுவாக முதலீடுகள் என்பது இலக்கு சார்ந்து இருக்க வேண்டும். திருமணம், வாகனம் வாங்குவது, வெளிநாட்டு கல்வி, ஓய்வு காலம் என்பதை இலக்குகளாக வைத்து முதலீட்டினை தொடங்க வேண்டும்.

எங்கு முதலீடு என்பது உங்களுடைய தேவைக்கான காலம் மற்றும் உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறனை பொறுத்து இருக்கும். சந்தையின் ஏற்ற இறக்கம் குறித்து உங்களுக்கு அச்சம் இருந்தால் ஆர்டி, பிபிஎப் உள்ளிட்ட நிரந்தர வருமானம் கொடுக்கும் திட்டங்களில் முதலீடு செய்யலாம். மேலும்  வழக்கமாக பிடித்தம் செய்யும் பிஎப் தொகையை விட கூடுதலாக அதில் முதலீடு செய்யலாம்.

அதே சமயம் உங்களுக்கு ரிஸ்க் எடுக்கும் திறன் இருக்கிறது. உங்களது பெற்றோர்கள் உங்களை நம்பி இல்லை என்னும் பட்சத்தில் மியூச்சுவல் பண்ட்கள் குறித்து பரிசீலனை செய்யலாம்.

முதல் முறையாக முதலீடு செய்பவர்கள் பேலன்ஸ்ட் பண்ட் (பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தையில் முதலீடு செய்யப்படும்) மற்றும் லார்ஜ் கேப் பண்ட்களில் (பெரிய நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்யப்படும்) முதலீடு செய்யலாம்.

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்யும் போது அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு தேவைப்படாத தொகையை முதலீடு செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த தொகை நீண்ட காலம் முதலீடு செய்யப்பட்டிருக்கும். சராசரியை விட கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கும்.

வரிச்சலுகை என்பது முக்கியமானதுதான். ஆனால் வரிச்சலுகை மட்டுமே முதலீட்டை தீர்மானிக்காது. வரிச்சலுகைக்காக வழக்கமான காப்பீட்டு பாலிசியை எடுக்க வேண்டாம். இந்த பாலிசிகளில் வருமானமும் குறைவு, ஆயுள் காப்பீடும் குறைவு, அதே சமயத்தில் செலுத்தப்படும் பிரீமிய தொகையும் அதிகம். அதனால் முதலீட்டையும் காப்பீட்டினையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு வாங்குவது தவறில்லை. கிரெடிட் கார்டு இருக்கும் பட்சத்தில் கூடுதல் பணப்புழக்கம் இருக்கும். அவசர தேவைக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் உங்களுக்கான கடன் எல்லையில்  அதிகபட்சம் 50 சதவீதம் வரை மட்டுமே பயன்படுத்தவும். கிரெடிட் கார்டு விதிமுறைகளை கவனமாக பின்பற்றவும்.

வழங்கப்பட்டுள்ள கடைசி தேதிக்குள் முழுத்தொகையும் செலுத்தவும். பாதித்தொகை மட்டுமே செலுத்தும்பட்சத்தில், மீதமுள்ள தொகைக்கு அதிக வட்டி செலுத்த வேண்டி இருக்கும். கடைசி தேதியை நினைவில் வைத்துக்கொள்ளவும்.

வேலைக்கு சேர்ந்த சில மாதங்களிலே வீடு, நிலம், சொகுசு கார் ஆகியவற்றை வாங்க வேண்டாம். ஆரம்ப கட்டத்தில் அதிக கடன் வாங்கும்பட்சத்தில் பணப்புழக்கம் குறையும். மாதந்திர தேவைக்கு பணம் இருக்காது. இதை விட அதிக தொகை கடனுக்கு செல்லும்பட்சத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பு குறையும்.

Leave a comment

Your email address will not be published.