மும்பை விமான விபத்தின்போது மதிய உணவு இடைவேளை காரணமாக 40 கட்டிடத் தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் மும்பையில் நேற்று முன்தினம் ஒரு கட்டிடத்தின் மீது விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 2 பைலட்டுகள், 2 பொறியாளர்கள், சாலையில் நடந்து சென்ற ஒருவர் என மொத்தம் 5 பேர் பலியாகினர்.
விமானம் விழுந்த கட்டிடத்தில் கட்டுமானப் பணிகள் நடந்து வந்தன. இதில் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மதிய உணவு இடைவேளைக்காக வெளியே சென்றிருந்தனர். அந்த நேரத்தில்தான் கட்டிடத்தின் மீது விமானம் விழுந்துள்ளது. சில நிமிட இடைவெளியில் அதிர்ஷ்டவசமாக 40 தொழிலாளர்களும் உயிர் தப்பியுள்ளனர்.
விமான விபத்தில் தொழிலாளர் நரேஷ் குமார் நிஷாத் என்பவர் மட்டும் 25 சதவீதம் அளவுக்கு தீக்காயம் அடைந்துள்ளார்.
அவர் கூறியபோது, “மதிய உணவுக்காக தொழிலாளர்கள் அனைவரும் வெளியே சென்றுவிட்டனர். நான் மட்டுமே கட்டிடத்தில் இருந்தேன். எனினும் அதிர்ஷ்டவசமாக தீக்காயங்களுடன் தப்பிவிட்டேன். தொழிலாளர்கள் பணி செய்து கொண்டிருக்கும்போது விமானம் மோதியிருந்தால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும்” என்று தெரிவித்தார்.