ம.பி.யில் காங்கிரசுடன் கூட்டணி கிடையாது 230 தொகுதிகளிலும் போட்டி – பகுஜன் சமாஜ்

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்து உள்ளது. #Mayawati #BSP
போபால்,
பாரதீய ஜனதா கட்சி ஆட்சிசெய்யும் மத்திய பிரதேச மாநிலத்தில் இவ்வருட இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. விவசாயிகள் பிரச்சனையில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள பா.ஜனதா அரசை அகற்ற வேண்டும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு உள்ள வாக்கை இழந்துவிடக்கூடாது என்பதில் தீவிரமாக இருக்கும் காங்கிரஸ் அக்கட்சியை கூட்டணியில் இணைக்க முயற்சிக்கிறது. கூட்டணி உறுதியாகிவிட்டது எனவும் தகவல் வெளியாகியது.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் நர்மதா பிரசாத் அஹிர்வார், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என கட்சியின் மாநில அளவிலும், தேசிய அளவிலும் பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என கூறியுள்ளார். எங்களுடைய இன்றைய நிலைப்படி, நாங்கள் 230 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளோம். கூட்டணி தொடர்பாக கட்சியின் மத்திய தலைமையிடம் இருந்து எங்களுக்கு எந்தஒரு உத்தரவும் வரவில்லை எனவும் குறிப்பிட்டு உள்ளார்.
இதற்கிடையே மாநில காங்கிரஸ் மீடியா பிரிவு தலைவர் மனாக் அகர்வால் பேசுகையில், நாங்கள் எந்தஒரு கட்சியின் பெயரையும் தெரிவிக்கவில்லை. ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சிக்கிறோம் என கூறினோம். நாங்கள் பகுஜன் சமாஜ் என குறிப்பிடவில்லை. தேர்தல் வரும் போது உள்ள நிலையை பொருத்துதான் கூட்டணி அமையும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published.