யூனியன் பிரதேசமான டெல்லியில் யாருக்கு அதிகாரம்? உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

துணை நிலை ஆளுநருக்குத்தான் அதிகாரம் அதிகம் என்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக ஆம் ஆத்மி அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கிறது.
புதுடெல்லி,
யூனியன் பிரதேசமான டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் காட்டிலும், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட துணை நிலை ஆளுநருக்குத்தான் அதிகாரம் அதிகம் என்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக ஆம் ஆத்மி அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது.
யூனியன் பிரதேசமான டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தும், மத்திய அரசின் துணை நிலை ஆளுநர்தான் பெரும்பாலான நியமனங்கள், முடிவுகளை எடுத்து வந்தார். இதனால், முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், துணை நிலை ஆளுருக்கும் இடையே கடும் மோதல் இருந்து வந்தது.  மந்திரி சபை எடுக்கும் எந்த முடிவையும் டெல்லி துணை ஆளுநர் செயல்படுத்த விடுவதில்லை. ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குகிறார் என்று ஆம் ஆத்மி அரசு குற்றம் சாட்டியது. இதனால், டெல்லியில் யாருக்கு உண்மையான அதிகாரம் இருக்கிறது என விளக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட்4-ம் தேதி தீர்ப்பளித்தது. அதில் அரசியலமைப்புச் சட்டப்படி டெல்லியில் துணை நிலை ஆளுநர்தான் நிர்வாகத்தின் தலைவர். அமைச்சரவையின் பரிந்துரைப்படி, ஆலோசனைப்படி அவர் செயல்படலாம் எனத் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட், அசோக்பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நடந்தது. இந்த வழக்கில், இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பு கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், மேற்கூறிய வழக்கில் இன்று(ஜூலை-4) உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.  டெல்லியில், நிலவும் அதிகார மோதலுக்கு தீர்வு காணும்  வகையில் இந்த தீர்ப்பு அமையலாம் எனக்கூறப்படுவதால், அனைத்து தரப்பினரும் எதிர்நோக்கியுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published.