ராமேசுவரத்தில் விடியவிடிய சோதனை: ஆயுத குவியல் சிக்கியது எப்படி?- அசம்பாவிதங்களை தவிர்க்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

ராமேசுவரம் அருகே தோண்டதோண்ட ஆயுதங்கள் கிடைத்தன. இவற்றை வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இந்த வெடிகுண்டுகளால் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் ஊராட்சி அந்தோனியார்புரத்தைச் சேர்ந்தவர் எடிசன்(45). மீனவரான இவர் தனது வீட்டுக்கு கழிவு நீர் தொட்டி (செப்டிக் டேங்க்) கட்டுவதற்காக நேற்று முன்தினம் வீட்டுத் தோட்டத்தில் தொழிலாளர்களைக் கொண்டு பள்ளம் தோண்டினார்.

அப்போது ஒரு இடத்தில் சிறிய ரக இரும்பு பெட்டி தென்பட்டது. அதை உடைத்து பார்த்தபோது துப்பாக்கி குண்டுகள் இருப்பது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த எடிசன் போலீஸாருக்குத் தகவல் அளித்தார். போலீஸார் விரைந்து வந்து அப்பகுதியில் ஆழமாக தோண்டிப் பார்த்தபோது, ஆயுதக் குவியல் இருந்தது தெரியவந்தது.

தகவலறிந்த ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவர் என்.காமினி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, ராமேசுவரம் டிஎஸ்பி மகேஷ், மாநில கியூ பிராஞ்ச் அதிகாரிகள், தேசிய உளவுத் துறை போலீஸார் சம்பவ இடத்துக்கு இரவு 10 மணிக்கு மேல் வந்து ஆயுதக் குவியலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இவை வெடிக்கக் கூடிய அபாயம் இருப்பதாகக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் வசிக்கும் மக்களை போலீஸார் வெளியேற்றினர். பின்னர் வெடிகுண்டுகளை செயல் இழக்க வைக்கும் தனிப் படையினர் பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் அப்பகுதியில் பள்ளம் தோண்டினர்.

ஸ்கேனர் மூலம் ஆய்வு

முதலில் சிக்கிய சிறிய இரும்புப் பெட்டிகளை போலீஸார் திறந்து பார்த்தபோது அதில் தோட்டாக்களும், ஏராளமான ஆயுதங்களும் சிக்கின. அதைத் தொடர்ந்து அந்த தோட்டத்தை சுற்றிலும் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என நவீன ஸ்கேனர் கருவியைக் கொண்டு ஆய்வு செய்தனர். மேலும் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு விடிய விடிய தோண்டும் பணி நடைபெற்றது.

சிக்கிய ஆயுதங்கள்

அப்போது சிக்கிய ஆயுதக் குவியல்களில் 22 பெட்டிகளில் சிறிய எல்என்ஜி ரக துப்பாக்கி குண்டுகள் 5,500 இருந்தன. 9 பெட்டிகளில் எஸ்எல்ஆர் ரக துப்பாக்கி குண்டுகள் 2,250-ம், 4 பெட்டிகளில் இயந்திர துப்பாக்கி குண்டுகள் 400-ம், கையெறி குண்டுகள் 15-ம், கடலில் வெடிக்கப் பயன்படும் கண்ணிவெடிகள் 5-ம் இருந்தன.

மேலும் பர்ஸ்ட் ஸ்டார்ட் குண்டுகள் 3, டெட்டனேட்டர்களை வெடிக்கச் செய்யும் சிலாப் 201, வெடிகுண்டுகளை வெடிக்க பயன்படுத்தும் 8 ரோல் வயர்கள் (காப்பர் கம்பிகள்), சிறிய ரக ஜெனரேட்டர் மோட்டார் ஒன்று ஆகியவை இருந்தன.

இந்த ஆயுதங்கள் 1983 மற்றும் 1984-ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டவை. இங்கு கண்டெடுக்கப்பட்ட ஆயுதக் குவியல்களை போலீஸார் அப்பகுதியில் மற்றொரு இடத்தில் குழி தோண்டி பாதுகாப்பாக வைத்துள்ளனர். இப்பகுதிக்கு யாரும் செல்லாமல் இருக்க துப்பாக்கி ஏந்திய போலீஸார் விடியவிடிய பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published.