ரியல் எஸ்டேட் துறையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர பரிசீலனை -அருண் ஜெட்லி

வாஷிங்டன்: அதிக அளவில் பணம் புழங்கும் துறையாக விளங்கும் ரியல் எஸ்டேட் தொழிலை இதை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இது குறித்து அடுத்து நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் வரி சீர்திருத்தம் குறித்து பேசினார். அப்போது அவர், இந்தியாவில் அதிக அளவில் பணம் புழங்கும் துறையாகவும், அதே அளவுக்கு வரி ஏய்ப்பு நடைபெறும் தொழிலாகவும் ரியல் எஸ்டேட் துறை விளங்குகிறது என்று கூறினார்.

மேலும் பேசிய ஜெட்லி, இத்துறை இன்னமும் ஜிஎஸ்டி வரம்புக்குள் வராத துறையாகவும் உள்ளது. சில மாநிலங்கள் ரியல் எஸ்டேட் தொழிலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளன.

இந்தத் தொழிலையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது வரி ஏய்ப்பையும், பண பதுக்கலையும் தடுக்கும் என தனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. ரியல் எஸ்டேட் தொழிலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதை சில மாநிலங்கள் வரவேற்கின்றன. சில மாநிலங்களோ இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

நவம்பர் 9ஆம் தேதி குவஹாத்தியில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது இது குறித்து விவாதிக்கப்படும். இந்த விஷயத்தில் இரண்டு விதமான கருத்துகள் நிலவுகின்றன. இதனால் இது குறித்து அடுத்த கட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒருமித்த கருத்து உருவாக்கப்படும் என்றார்.

இதன் மூலம் வீடு அல்லது நிலம் வாங்கும் உரிமையாளர் ஒட்டுமொத்தமாக ஒரே ஒரு தவணை வரியை செலுத்தினால் போதுமானதாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், இவ்விதம் இறுதியாக செலுத்தப்படும் வரி மிகவும் குறைவானதாக இருக்கும். இதன் மூலம் நுகர்வோர் பயன்பெறுவர் என்று ஜெட்லி கூறினார்.

இந்தியாவில் வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்க பல ஆண்டுகளாகவே எவ்வித உறுதியான நடவடிக்கைகள் எதுவும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படவில்லை. இதனாலேயே உருவான நிழல் உலக பொருளாதாரத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக இதுபோன்ற நடவடிக்கைகள் சமீப காலமாக மேற்கொள்ளப்பட்டதாக ஜெட்லி குறிப்பிட்டார்.

Leave a comment

Your email address will not be published.