ரோஹிங்கியா அகதிகள் முகாம்களில் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு அட்டூழியங்கள் நடைபெறுவதாக ஐ.நா. பொதுச் செயலர் அண்டோனியோ குத்தேரஸ் குற்றம் சாட்டியுள்ளார். மியான்மரில் நடைபெற்று வரும் கலவரம், வன்முறைகளில் அங்குள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஏராளாமானோர் அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களைச் சமாளிக்க முடியாமல் வங்கதேச அரசு திணறி வருகிறது. அங்கு சுமார் 7 லட்சம் முஸ்லிம்கள் தஞ்சம் புகுந்துள்ளதாகத் தெரிகிறது.
கடந்த மே மாதத்தில் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் பிரதி நிதிகள் குழு மியான்மருக்குச் சென்று அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்தது. வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளிடமும் நிலைமையைக் கேட்டு பாதுகாப்பு கவுன்சில் குழு ஆய்வு செய்தது.

இந்நிலையில் ஐ.நா. பொதுச் செயலர் அண்டோனியோ குத்தேரஸ் ட்விட்டரில் கூறியதாவது: வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலைமை பரிதாபகரமாக உள்ளது. கற்பனைக்கு எட்டாத அளவில் அங்கு அட்டூழியங்கள் நடந்துள்ளதை நான் பார்த்தேன். வங்கதேசத் தின் காக்ஸ் பஜார் பகுதியில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் சிலர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் முகாம்களில் பெண்கள் மீதான பலாத்கார சம்பவங்களும் நடந்துள்ளன.
அவர்கள் தங்களுக்கான நீதியைக் கேட்கிறார்கள். மேலும் பாதுகாப்பாக நாடு திரும்பவும் அவர்கள் உதவி கோருகின்றனர். உலகில் அதிக அளவில் பாகுபாடு பார்க்கப்படும் இனங்களில் ஒன்றாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் இருக்கின்றனர். ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்தனர். வங்கதேச மக்கள் காட்டிய இரக்க குணத்தாலும், தாராள மனதாலும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் காப்பாற் றப்பட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களைத் திரும்ப தங்கள் நாட்டுக்கு அழைத்துக் கொள்ள மியான்மர் கடந்த ஆண்டு நவம்பரில் ஒப்புக்கொண்டது. ஆனால் வங்கதேசமும், மியான்மரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறிக் கொண்ட தால் அந்த முயற்சி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
தங்களின் உரிமை, குடியுரிமை, பாதுகாப்பு ஆகியவை திரும்பக் கிடைப்பதாக உறுதி அளித்தால் மட்டுமே மீண்டும் தங்கள் நாட்டுக்குத் திரும்ப முடி யும் என்று ரோஹிங்கியா முஸ்லிம்கள் அறிவித்துள்ளனர்.