வங்கதேசத்தில் ரோஹிங்கியா அகதிகள் முகாம்களில் நிலச்சரிவு: 14 பேர் பலி, பலரை காணவில்லை

 

தென்கிழக்கு வங்கதேசத்தில் கனமழை காரணமாக ரோஹிங்கியா அகதிகள் வசிக்கும் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரை காணவில்லை.

மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் கடந்த ஆண்டு ராணுவத் தாக்குதல் காரணமாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் லட்சக்கணக்கானோர் அந்நாட்டை விட்டு வெளியேறி வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்தனர். இவங்கள் வங்கதேசத்தில் மியான்மரை ஒட்டிய ரங்கமதி, காக்ஸ் பஜார் ஆகிய மாவட்டங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் பல்வேறு இடங்களில் அகதிகளின் குடிசைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதில் ரங்கமதி மாவட்டத்தில் 12 பேரும் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் இருவரும் உயிரிழந்தனர். மேலும் பலரை காணவில்லை.

நிலச்சரிவு காரணமாக ரங்கமதி மாவட்டம் நாட்டின் பிற பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மீட்பு மற்றும் நிவாரணக் குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல முடியவில்லை.

பேரிடர் மேலாண்மை ஆணைய உயரதிகாரி ஒருவர் கூறும்போது, “மழையால் 1,500 குடிசைகள் சேதம் அடைந்துள்ளன. கனமழை மற்றும் நிலச்சரிவுக்கு அதிக வாய்ப்புள்ள இடங்களில் இன்னும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்” என்றார். – பிடிஐ

 

Leave a comment

Your email address will not be published.