வடகொரிய ராணுவத்தின் மூத்த தளபதிகள் திடீரென மாற்றப் பட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேச உள்ளனர். இந்தப் பின்னணியில் வடகொரிய ராணுவத்தின் 3 மூத்த தளபதிகள் திடீரென மாற்றப்பட்டுள்ளனர்.

கிம் ஜாங் உன் தலைமையிலான கொரிய மக்கள் கட்சி வடகொரியாவை ஆட்சி செய்து வருகிறது. கட்சியின் ஆதிக்கத்தை மீறி ராணுவம் செயல்படக்கூடாது என்பதற்காக முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வடகொரிய ராணுவ தளபதிகள் மாற்றப்பட்டிருப்பதை
தென்கொரிய அரசு வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
அதிபர் ட்ரம்பும், அதிபர் கிம்மும் சிங்கப்பூரின் ஷங்ரிலா ஓட்டலில் சந்தித்துப் பேச உள்ளனர். அந்த ஓட்டலும் சுற்றுவட்டார பகுதிகளும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.
ரஷ்யா அழைப்பு
இதனிடையே ரஷ்யாவுக்கு வருமாறு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி வரும் செப்டம்பரில் கிம் ஜாங் உன் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது.