வாராக்கடன் சிக்கல் மேலும் மோசமாகும் என்று ரிசர்வ் வங்கி அறிக்கை குறிப்பிடுகிறது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டுள்ள என நிதி ஸ்திரதன்மை அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஒட்டுமொத்த வாராக்கடன் அதிகரிப்பு காரணமாக வங்கித் துறை இருண்ட காலமாக காட்சியளிக்கிறது. 2018 மார்ச் இறுதிவரை வங்கிகளின் வாராக்கடன் 11.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது நடப்பு நிதியாண்டு இறுதியில் 12.2 சதவீதமாக அதிகரிக்கும். வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக்கடன் அதிகரிப்பு காரணமாக வங்கித் துறையின் அழுத்தம் அதிகரித்து வருகிறது.

வங்கிகளின் வாராக்கடன் அழுத்தம் காரணமாக தற்போது 11 பொதுத்துறை வங்கிகள் பிசிஏ சட்டத்தின் படி ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக்கடன் 2018 மார்ச் மாதத்தில் 21 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது நடப்பு நிதியாண்டு இறுதியில் 22.3 சதவீதமாக அதிகரிக்கும். இந்த 11 வங்கிகள் தவிர மேலும் 6 வங்கிகள் தங்களது மூலதனச் செயல்பாடுகளில் மோசமாக நிலையில் உள்ளன.
பிசிஏ சட்டத்தின் கீழ் ஐடிபிஐ, யூகோ வங்கி, செண்ட்ரல் பேங்க், பாங்க் ஆப் இந்தியா, ஐஓபி, தேனா வங்கி, ஓரியண்டல் வங்கி, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, யுனைடெட் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, அலகாபாத் வங்கி என 11 வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. இந்த வங்கிகள் புதிய கிளைகளை திறப்பது, பணியாளர்களை பணியமர்த்துவது உள்ளிட்டவற்றை ரிசர்வ் வங்கி கண்காணிக்கும். வங்கிகளின் லாப விகிதம் குறைந்துள்ளதையும்,சில வங்கிகள் மட்டும் லாபம் ஈட்டியுள்ளன என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.