விரதமிருந்து வைகாசி விசாகம் வழிபடும் முறை…!

இன்று (திங்கட்கிழமை) வைகாசி விசாக திருநாள். வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் மழலைப்பாக்கியம் உடனே கிடைக்கும்.

இன்று (திங்கட்கிழமை) வைகாசி விசாக திருநாள். சக்தியிடம் முருகன் விசாகனாக தோன்றிய நாள்தான் வைகாசி விசாகம் ஆகும். அதனால்தான் முருகப் பெருமானுக்கு வைகாசி விசாகத்திருநாள் ஓர் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. ஒருமுறை அசுரர்களின் கொடுமைகளை தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தமது குறைகளை முறையிட்டனர்.

சிவபெருமான் அசுரர்களுடைய கொடுமையை களைந்து அவர்களை காத்தருள விரும்பினார். தமது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகளைத் தோற்று வித்தார். அவை தேவர்களினால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கை சரவணப் பொய்கையிலே கொண்டு சேர்த்தது.

புராணங்களின்படி சிவனிடமிருந்து புறப்பட்ட தீப்பொறி, சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது.
இது ஆறுமுகப் பெருமான் அவதரித்த தினமாக கருதப்படுகிறது. வைகாசி மாதம்  விசாகம் நட்சத்திரம் தினத்தன்று இந்த அவதாரம் நிகழ்ந்தது. இதன் காரணமாக வைகாசி  விசாகம் தினம் விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

உலகத்து உயிர்கள் யாவும் உய்யும் பொருட்டு சிவபெருமானின் திருவிளையாடலால் குழந்தையான நாள். ஆதலால் சைவ மக்கள் வழிபாட்டுக்கு வைகாசி விசாக நாள் மிகவும் சிறந்ததாகும்.

நட்சத்திர அடிப்படையில் நாம் தெய்வங்களை கொண்டாடும் பொழுதுதான் அச்சமில்லாத வாழ்க்கை நமக்கு அமைகிறது. ஆற்றலும் அவன் அருளால் நமக்கு கிடைக்கிறது. முருகனுக்கு உகந்த நாளில் குறிப்பாக வைகாசி மாதம் வரும் ‘விசாக’ நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும்.

பகை விலகும்.பாசம் பெருகும். அவனது திருப்புகழைப் பாடினால் எதிர்ப்புகள் அகலும். அன்றைய தினம் குடை, மோர், பானகம், தயிர்சாதம் போன்றவற்றை தானம் செய்தால் குலம் தழைக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அன்று அதிகாலையில் விநாயகப் பெருமானை வழிபட்டு, இல்லத்து பூஜை அறையில் முருகப்பெருமான் படம் வைத்து, அதற்கு முன்னால் ஐந்து முக விளக்கேற்றி ஐந்து வித எண்ணை ஊற்றி, ஐந்துவித புஷ்பம் சாற்றி, ஐந்து வகை பழங்களை அர்ப்பணித்து, கந்தனுக்கு பிடித்த அப்பமான கந்தரப்பத்தையும், அவனுக்கு பிடித்த மாம்பழத்தையும் வைத்து கவச பாராயணம் செய்ய வேண்டும்.

விசாக நட்சத்திர தினத்தன்று உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள முருகப்பெருமான் வீற்றிருக்கும் ஆலயத்திற்கு சென்று அவருக்கு நல்லெண்ணையில் அபிஷேகம் செய்து பார்த்தால் நல்லன யாவும் நடைபெறும்.  பசும்பாலால் அபிஷேகம் செய்து பார்த்தால் விசும்பும் வாழ்க்கை மாறி வியக்கும் விதத்தில் ஆயுள் கூடும்.

பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்து பார்த்தால் பட்ட கடன்கள் தீரும். பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் பார்க்கும் செயல்கள் எல்லாம்

சர்க்கரையால் அபிஷேகம் செய்து பார்த்தால் சந்தித்தவர்கள் எல்லாம் நண்பர்களாக மாறுவர். இளநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் இனிய சந்ததிகள் பிறக்கும் எலுமிச்சம் பழத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் எம பயங்கள் தீரும். மாம்பழத்தில் அபிஷேகம் செய்து பார்த்தால் மகிழ்ச்சி தரும் விதத்தில் செல்வநிலை உயரும். திருநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் திக்கட்டும் புகழ் பரவும் வாய்ப்பு கிடைக்கும்.

அன்னத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் அரசு வழி ஆதரவு நமக்கு கிடைக்கும். சந்தனத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் சரும நோய் அத்தனையும் தீர்ந்தும் போகும். பன்னீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் பார்போற்றும் செல்வாக்கு நமக்கு சேரும். தேனாலே அபிஷேகம் செய்து பார்த்தால் தித்திக்கும் சங்கீதம் விருத்தியாகும்.

இதனால்தான் வைகாசி விசாகம் தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் முருகன் திருத்தலங்களில் கோலாகல விழா கொண்டாடப்படுகிறது. விசாக நட்சத்திரத்தில் உதித்த விசாகன் என்ற முருகன் பெயரால் இரு திருத்தலங்கள் உள்ளன. ஒன்று வைசாக் என்று அழைக்கப்படும் விசாகப்பட்டினம் ஆகும். இது ஆந்திர மாநிலத்தில் உள்ள துறைமுக நகரமாகும்.

இது அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் தலங்கள் 237-ல் ஒரு திருத்தலமாகும். மற்றொரு தலம் விசாகபவனம் எனப்படும் தலமாகும். இத்தலம் தணிகை புராணம் எழுதிய நூலாசிரியர் ஸ்ரீகச்சியப்ப முனிவர் என்பவர் கூறும் 64 திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது.

சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள மாசிலாமணீஸ்வரர் கோவிலில் வைகாசி பவுர்ணமி அன்று இறைவனும், இறைவியும் லிங்கத்தில் ஐக்கியமாகும் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

விசாகம் குருவிற்குரிய நட்சத்திரமாவதால் குருவிற்கு உரிய தலமான திருச்செந்தூரில் வைகாசி விசாகப் பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள சிம்மாசலத்தில் கோவில் கொண்டுள்ள வராக லட்சுமி நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாகம் சிறப்பான தினமாகும். சந்தனக் காப்புடன் ஆண்டு முழுவதும் காட்சி தரும் இந்த நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாக நாளில் சந்தனப் பூச்சைக் களைவார்கள். மூல விக்கிரகத்தின் இயற்கை தோற்றப்பொழிவு அன்று தரிசனமாகும்.  பின்னர் சுமார் 500 கிலோ சந்தனம் பயன்படுத்தி சந்தனப்பூச்சு செய்வார்கள்.

கன்னியாகுமரி அம்மனுக்கு ‘ஆராட்டு விழா’ இந்நாளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிறப்பாக சொல்லப்படும் காஞ்சி கருட சேவை, வைகாசி விசாகத்தை ஒட்டியே நடைபெற்று வருகிறது.

திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் என்ற மகான் வைகாசி விசாகத்தில் சித்தியடைந்ததால் இந்நாளில் அவரது குருபூஜை திருப்போரிலுள்ள அவரது சமாதியில் விசேஷமாக நடைபெற்று வருகிறது.

இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமி மலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான். உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் நடக்கும் விசாக திருவிழா தனித்தன்மை கொண்டது. இதில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் லட்சக்கணக்கில் கலந்து கொள்வார்கள்.

விசாகத்தன்று அதிகாலையில் கடலில் நீராடி கடல் மண்ணை எடுத்து தலையில் சிறிய பெட்டிகளில் சுமந்து வந்து சுயம்புநாதர் ஆலயத்தின் அருகில் குவிப்பார்கள். இதனால்  பாவ வினைகளும், நோய்களும் தீரும்.

செல்வங்கள் சேரும், புகழ் சேரும், கல்வி அறிவு அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் வெற்றி அடையும். சுயம்புலிங்கத்தின் அருள் என்றும் மண் சுமந்தாருடன் நிலைத்து நிற்கும்.

வைகாசி மாதம் பவுர்ணமியும், விசாக நட்சத்திரமும் கூடிய உச்சி வேளையில் அறுக்கு இலையும், அரிசியும் தலையில் வைத்துக் கொண்டு உத்திரகோச மங்கை என்னும் தலத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் புனித நீராட வேண்டும். பின் ஆலயத்தின் உட்புறத்திலுள்ள அக்னி தீர்த்தத்தில் எள், அருகு, கோமியம் இவற்றை சிரசில் தெளித்துக் கொண்டு நீராடி கருவறையில் குடி கொண்டிருக்கும் மங்களநாதனுக்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். பின் தான தர்மங்களை செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

குழந்தை பாக்கியத்திற்காக கோவில் கோவிலாக ஏறி இறங்கும் தம்பதியர் இன்றும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள், வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் மழலைப்பாக்கியம் உடனே கிடைக்கும்.

இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர் சாதம் ஆகியவற்றை ஏழை-எளியவர்களுக்கு தானம் கொடுப்பது நல்லது.

Leave a comment

Your email address will not be published.