நியூயார்க்: அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்து அளிக்க உள்ளார். இந்த விருந்து புதன் கிழமை அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்தார் விருந்து அதிபர் தலைமையில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விருந்தினர் பட்டியல் குறித்து வெள்ளை மாளிகை எந்த தகவலும் அளிக்கவில்லை. அமெரிக்காவில் சுமார் 3.45 மில்லியன் முஸ்லிம்கள் உள்ளனர். ரமலான் நோன்பு அனுசரிப்பவர்கள் அதிகாலை முதல் மாலை வரை, உண்ணாமல், நீரருந்தாமல், புகைக்காமல், மற்றும் வேறு தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். இது இஸ்லாமியர்களின் ஐந்து அடிப்படை கடமைகளில் மூன்றாவது கடமை ஆகும்.
கடந்த ஆண்டு டிரம்ப் பதவியேற்ற போது பல ஆண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த விருந்து அளிக்கும் மரபை ரத்து செய்தார். ஆனால் இந்த ஆண்டு விருந்து அளிக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். டிரம்ப் அரசு பதவியேற்ற நாளில் இருந்தே இஸ்லாமியர்கள் மீதான அதிருப்தியையும் விமர்சனத்தையும் முன்வைத்தபடி இருந்தார். மேலும் இஸ்லாமிய நாடுகளில் இருந்து முஸ்லீம்கள் அமெரிக்காவில் குடியேறுவதற்கு முழுவதும் தடைவிதிக்க வேண்டும் என்றும் டிரம்ப் கூறியிருந்தார். தற்போது தமது எண்ணத்தை டிரம்ப் மாற்றிக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.