வெள்ளை மாளிகை தகவல் 12ம் தேதி சிங்கப்பூரில் டிரம்ப் – கிம் சந்திப்பு

வாஷிங்டன்: நடக்குமா, நடக்காதா? என்ற பலத்த எதிர்பார்ப்புக்கிடையே வருகிற 12ம் தேதி காலை 9 மணிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. தொடர்ந்து அணுஆயுத சோதனை நடத்திய வடகொரியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே பகை நிலவி வந்தது. இந்நிலையில் தென்கொரியா மேற்கொண்ட நடவடிக்கையின் எதிரொலியாக இருநாடுகளும் சமரசமாக செல்லவும், பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் முன் வந்தன. அதிபர் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் ஆகியோர் சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால் திடீரென கடந்த மாதம் வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே மீண்டும் கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக டிரம்ப் அறிவித்தார். அதன்பின் வடகொரிய தூதர், டிரம்ப் சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து திட்டமிட்டபடி வடகொரிய அதிபருடன் சந்திப்பு நடைபெறும் என்று டிரம்ப் அறிவித்தார்.

திட்டமிட்டபடி வருகிற 12ம் தேதி இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு சந்தித்து பேசுவார்கள் என வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது. வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் சாரா சான்டர்ஸ் கூறுகையில், “இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூர் நேரப்படி காலை 9 மணிக்கு சந்திப்பார்கள். இது தொடர்பான தினசரி ஏற்பாடுகள் குறித்த தகவல்களை தேசிய பாதுகாப்பு குழுவிடம் இருந்து அதிபர் பெற்று வருகின்றார். ” என்றார். இருநாட்டு தலைவர்களின் சந்திப்பும் நிகழ்வதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் ஒரு சில தகவல்கள் மட்டுமே பகிரங்கமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இருதலைவர்களும் சிங்கப்பூரின் செந்தோசா தீவில் உள்ள சுற்றுலா விடுதியில் பேச்சுவார்த்தை நடத்தபோவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published.